Published : 03 Dec 2023 08:06 AM
Last Updated : 03 Dec 2023 08:06 AM

சொந்த மண்ணில் முதன் முறையாக நியூஸிலாந்தை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை!

சில்ஹெட்: சொந்த மண்ணில் முதன் முறையாக நியூஸிலாந்து அணியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீழ்த்தி சாதனை படைத்தது வங்கதேச அணி.

நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சில்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 310 ரன்களும், நியூஸிலாந்து அணி 317 ரன்களும் எடுத்தன.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் அணி 100.4 ஓவர்களில் 338 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 105, முஸ்பிகுர் ரகிம் 67, மெஹிதி ஹசன் 50 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் அஜாஸ் படேல் 4, இஷ் சோதி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

332 ரன்கள் இலக்குடன் பேட் செய்தநியூஸிலாந்து அணியானது வங்கதேசத்தின் சுழற்பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. டாம் லேதம் 0, டேவன் கான்வே 22, கேன்வில்லியம்சன் 11, ஹென்றி நிக்கோல்ஸ் 2, டாம் பிளண்டல் 6, கிளென் பிலிப்ஸ் 12, கைல் ஜேமிசன் 9 ரன்களில் வெளியேறினர். 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

டேரில் மிட்செல் 44, இஷ் சோதி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 71.1 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது 9-வது அரை சதத்தை கடந்த டேரில் மிட்செல் 120 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்த நிலையில் நயீம் ஹசன் பந்தை ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது பேக்வேர்டு ஸ்கொயர் திசையில் நின்ற தைஜூல் இஸ்லாமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் டிம் சவுதி 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும், நிதானமாக விளையாடிய இஷ் சோதி 91 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் சேர்த்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் நடையை கட்ட நியூஸிலாந்து அணியானது 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வங்கதேச அணி தரப்பில் தைஜூல் இஸ்லாம் 6 விக்கெட்களை வீழ்த்தினார். நயீம் ஹசன் 2 விக்கெட்களையும் ஷோரிபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இரு இன்னிங்ஸையும் சேர்த்துகூட்டாக 10 விக்கெட்கள் வீழ்த்திய தைஜூல் இஸ்லாம் ஆட்ட நாயகனாக தேர்வானார். சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணியை டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்னர் சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒன்றில்கூட வங்கதேச அணி வெற்றி பெற்றது இல்லை. இதில் 3 ஆட்டங்களில் தோல்விஅடைந்திருந்த வங்கதேச அணி 3 ஆட்டங்களை டிரா செய்திருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்டடெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி மிர்பூரில் தொடங்குகிறது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற வங்கதேச அணி வீரர் தைஜூல் இஸ்லாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x