

டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் சற்றும் எதிர்பாராத விதமாக 496 ரன்கள் குவித்தது.
298/9 என்ற நிலையிலிருந்து ஜோ ரூட், மற்றும் நம்பர் 10 பேட்ஸ்மென் ஜேம்ஸ் ஆண்டர்சன் இணைந்து 198 ரன்ளைக் கடைசி விக்கெட்டுக்காகச் சேர்த்து புதிய டெஸ்ட் சாதனையைப் புரிந்தனர். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் பில் ஹியூஸ் மற்றும் ஆகர் இணைந்து 163 ரன்களை 2013-இல் கடைசி விக்கெட்டுக்காகச் சேர்த்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
மேலும் டெஸ்ட் வரலாற்றிலேயே ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளிலும் கடைசி விக்கெட்டுக்காக சதக்கூட்டணி அமைத்தது இதுவே முதல் முறை.
நல்ல வேளையாக நம்பர் 10 வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரான 98 ரன்களை ஜேம்ஸ் ஆண்டர்சன் எடுக்க முடியவில்லை. அவர் கடைசியாக 81 ரன்களில் புவனேஷ் குமார் பந்தில் அவுட் ஆனார். புவனேஷ் குமார் உண்மையில் அற்புதமாக வீசி 30.5 ஓவர்களில் 8 மைடன்களுடன் 82 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோ ரூட் 295 பந்துகளைச் சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 154 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
ஜோ ரூட் தொடர்ந்து டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சிறப்பாக ஆடி வருகிறார், அவர் மனதளவில் பலவீனமானவர் என்றாலும் இந்தியப் பந்து வீச்சு பலவீனத்தைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 45 ரன்களில் இருந்தபோது முரளி விஜய் கல்லி திசையில் ஒரு கடினமான வாய்ப்பைக் கோட்டை விட்டார். ஆனால் சர்வதேச தரத்தில் அதைப் பிடிப்பதுதான் சிறந்த ஆட்டமாக இருக்க முடியும்.
தோனியின் உத்தியில் ஒரு தவறு என்னவெனில், இது எல்லா கேப்டன்களும் செய்யும் தவறுதாம், ஆஸ்திரேலிய கேப்டன்கள் தவிர, தோனி ஜோ ரூட்டிற்கு சிங்கிள் கொடுத்து ஆண்டர்சனை வீழ்த்த தப்புக் கணக்குப் போட்டார். நடந்தது என்னவெனில் ஆண்டர்சன் சிறப்பாக ஆடி சதம் எடுக்கும் அளவுக்கு வந்தார். அவருக்கு பேட்டிங் பயிற்சியளிப்பதா இந்திய பவுலர்களின் வேலை. அவருக்கு சுற்றிலும் ஃபீல்டர்களை நிறுத்தினார் தோனி, ஆனால் அதே அணுகுமுறையை ஜோ ரூட்டிற்கு அல்லவா கடைபிடித்திருக்க வேண்டும்.
ஜோ ரூட் ஏதோ செட்டில் ஆன விவியன் ரிச்சர்ட்ஸ் அல்லது, டிவிலியர்ஸ், அல்லது மைக்கேல் கிளார்க் என்றால் தோனி செய்தது சரி எனலாம். ஆனால் ஜோ ரூட்டே ஒரு பலவீனமான பேட்ஸ்மென். மிட்செல் ஜான்சன் அவரை நிறையவே அச்சுறுத்தியிருந்தார். அவர் மட்டுமல்ல ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் அவரையே இலக்காகக் கொண்டனர். தோனியின் அணுகுமுறையெல்லாம் ஆதிகால அணுகுமுறைகள்.
மொகமது ஷமியை ஜோ ரூட் இரண்டு அபாரமான டிரைவ்களை ஆடி சதம் கண்டார். ஸ்கோர் 400 ரன்களைக் கடந்தவுடன் எளிதான ரன் அவுட் வாய்ப்பை புவனேஷ் குமார் தனது துல்லியமற்ற த்ரோவினால் கோட்டைவிட்டார். இதைவிட, இதற்கு முன்னால் ஜோ ரூட்டிற்கு கோட்டை விடப்பட்ட ரன் அவுட் வாய்ப்பு மிகவும் கொடுமையானது. 92 ரன்களில் அவர் ஆடிவந்த போது மிட் ஆனில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க ஆசைப்பட்டு அவர் ஓடி வர பந்தை ஷமி எடுத்து அடிப்பதைப் பார்த்து ரீச் செய்யும் எண்னத்தையே கைவிட்டார் அவர், ஆனால் த்ரோ மோசமாகப் போனது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இதற்கு முன்னால் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 34. அவர் நின்று ஆடுவார். போராடி டிராவெல்லாம் செய்திருக்கிறார். ஆனால் 130 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 81 எடுத்திருப்பது இந்தியப் பந்துவீச்சை ஏதோ ஒரு விதத்தில் கேலி செய்வது போல்தான் தோன்றுகிறது.
நம்பர் 10 ஆகர் 98 ரன்கள் (ஆனால் இவரை நம்பர் 10 என்று கூறிவிடமுடியாது, இவர் ஒரு ஆல் ரவுண்டர்), மேற்கிந்திய தீவுகளின் டினோ பெஸ்ட் 95 ரன்கள் அதன் பிறகு 10ஆம் நிலை வீர்ரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 81. இவைதான் கடைசி பேட்ஸ்மென்களின் 3 சிறந்த ஸ்கோர்களாகும்
ரன்கள் எடுக்கத் திணறிவரும் அலிஸ்டர் குக் பேசாமல் அடுத்த டெஸ்ட் போட்டியில் கடைசி பேட்ஸ்மெனாகக் களமிறங்கி தனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்கலாம்.
இந்தியா தன் 2வது இன்னிங்சில் சற்று முன் வரை 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. 4ஆம் நாளான இன்று இன்னமும் குறைந்தது 25 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் புஜாரா 29 ரன்களுடனும், முரளி விஜய் 31 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
ஷிகர் தவான் இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பி 29 ரன்களில் அவுட் ஆனார். மொயீன் அலி வீசிய லாலி பாப் பந்தை அவரிடமே விசித்திரமாகக் கேட்ச் கொடுத்தார் அவர். அங்கு கம்பீர் தன் கையைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்.