“காலம் அதை தீர்மானிக்கும்” - அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து மெஸ்ஸி!

மெஸ்ஸி | கோப்புப்படம்
மெஸ்ஸி | கோப்புப்படம்
Updated on
1 min read

பியூனஸ் அய்ரஸ்: எதிர்வரும் 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் தற்போது சர்வதேச கால்பந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த சூழலில் 2026 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து மெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

“நான் ‘2026 உலகக் கோப்பை’ குறித்து இப்போதைக்கு யோசிக்கவில்லை. ஆனால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதில் பங்கேற்க முடியாமல் போவதற்கு எனது வயது காரணமாக இருக்கலாம். இருந்தாலும் என்ன நடக்கிறது என பார்ப்போம். இப்போதைக்கு 2024 ஜூன் மாதம் நடைபெற உள்ள கோபா அமெரிக்கா தொடரில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அது எங்களுக்கு சாதகமாக அமைந்தால் தொடர்ந்து கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை என்றால் அது மிகவும் கடினம்.

நான் களத்தில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் வரை தொடர்ந்து விளையாடுவேன். எனது எண்ணம் எல்லாம் கோபா அமெரிக்கா தொடர் மீது உள்ளது. அதன் பிறகு நான் விளையாடுவதை காலம் தீர்மானிக்கும்” என 36 வயதான மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

“கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு எனது ஓய்வு முடிவு நேர்மாறாக அமைந்தது. இப்போது நான் அணியில் இருக்க விரும்புகிறேன். உலகக் கோப்பை தொடர் நடைபெறும் போது எனது வயது அதில் விளையாட அனுமதிக்காது என்பதை அறிவேன்” என அவர் தெரிவித்துள்ளார். கத்தார் உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in