Published : 05 Jan 2018 10:47 PM
Last Updated : 05 Jan 2018 10:47 PM

பிடியை நழுவ விட்ட இந்திய அணி! இறுகப் பற்றிய தென் ஆப்பிரிக்கா 286 ரன்கள்; இந்தியா 28/3

கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் விஜய், தவண், கோலி விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 5 ரன்களுடனும், ரோஹித் சர்மா ரன் எடுக்காமலும் ஆடிவருகின்றனர்.

இன்றைய தினம் காலை முதல் 5 ஓவர்கள் புவனேஷ்குமாரின் பரபரப்பான 3 விக்கெட்டுகளுடன் தொடங்கி கடைசியில் இந்திய அணியின் வழக்கம் போலான வேகப்பந்து வீச்சுக்கு எதிரான வழக்கமான பலவீனத்துடனும் சொதப்பலுடனும் முடிந்தது.

காலையில் புவனேஷ்குமார் அற்புதமான ஸ்விங் பந்து வீச்சில் டீன் எல்கர், மார்க்ரம், ஆம்லா ஆகியோரை வீழ்த்தி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தவுடன் ஒருமுறை ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் 84 ரன்களுக்குச் சுருண்டதுதான் நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு கேப்டன் கோலியின் களவியூகம் அதற்குக் கை கொடுக்கவில்லை.

டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ் அபாரம்

ஏ.பி.டிவில்லியர்ஸ் எப்போது புவனேஷ்வர் குமாரை 4 பவுண்டரிகள் ஒரே ஓவரில் ஆஃப் திசையில் பளாரென்று அடித்தாரோ அப்போதே களத்தடுப்பு வியூகத்தை அமைத்து பவுண்டரிகளைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், பவுண்டரிகளைக் கட்டுப்படுத்தி அவருக்கு கிடுக்கிப் போடி போட்டிருந்தாலோ, ரன் எடுக்க அவர் திணறும் போது அஸ்வினைக் கொண்டு வந்து முயற்சி செய்திருந்தாலோ கோலி குறிக்கோளுடன் கேப்டன்சி செய்கிறார் என்று கூறலாம்.

பும்ரா, ஷமி, பாண்டியா நன்றாகவே வீசினர், ஆனால் நன்றாக வீசுவதற்கும் குறிக்கோளுடன் வீசுவதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு. நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம் இல்லாதது குறிக்கோள் அதனால்தான் அவர்கள் நன்றாக வீசினாலும் ஸ்மித்தை வீழ்த்த முடியவில்லை, வெல்ல முடியவில்லை, ஆஸ்திரேலிய அணியினர் பெரும்பகுதி சாதாரணமாகவே வீசினாலும் குறிக்கோளில் தெளிவாக உள்ளனர், அதனால் வெற்றி தானாகவே வருகிறது. அந்தக் குறிக்கோள் என்னவெனில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதே. களவியூகத்தைத் திட்டமிட்டபடி அமைத்தலே.

இன்று டிவில்லியர்ஸுக்கு இந்தத் தவறைத்தான் செய்தார் கோலி. பவுண்டரிகளை கட்டுப்படுத்தி, அவரை ரன்கள் எடுக்க திணறச் செய்தால் இந்தப் பிட்சில் அவர் விரைவில் காலியாகியிருப்பார். ஆனால் நடந்தது என்ன முன்னங்காலில் வந்து புல்ஷாட் வரை அவர் அபாரமான, கண்ணுக்கு விருந்தான ஷாட்களை ஆடி 65 ரன்கள் எடுத்தார், உணவு இடைவேளைக்குப் பிறகு ரன்களை கோலி கட்டுப்படுத்தினார், கவர் பாயிண்ட் வைத்து ரன்கள் வராத நிலையில் பும்ராவின் இன்ஸ்விங்கரில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். பும்ராவின் முதல் டெஸ்ட் விக்கெட் பரிசு விக்கெட்டான டிவிலியர்ஸ் விக்கெட்டாக அமைந்தது.

டுபிளெசிஸ் அவருக்கே உரிய பாணியில் 104 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்தார், பாண்டியாவின் பந்தில் கடுமையான எல்.பி. முறையீட்டில் நடுவர் நாட் அவுட் என்றதால் பிழைத்தார், ரிப்ளேயில் அது அவுட் போல்தான் தெரிந்தது. இதில் கோலி, பாண்டியா கடுமையாக ஏமாற்றமடைந்தனர். ஆனால் அதே ஓவரிலேயே டுபிளெசிஸ் கட் செய்ய முயன்று எட்ஜ் ஆகி வெளியேறினார். கோலி அவரை வார்த்தைகளால் வழியனுப்ப முயற்சி செய்தார், ஆனால் நடுவர்கள் கோலியை எச்சரித்தனர். டுபிளெசிஸ், டிவிலியர்ஸ் இணைந்து 114 ரன்களை 4வது விக்கெட்டுக்குச் சேர்த்தனர். இதில் இருவரும் 23 பவுண்டரிகளை விளாசியது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் தென் ஆப்பிரிக்க அணி 41 பவுண்டரிகள் இதில் 2 சிக்சர்களும் அடங்கும். தென் ஆப்பிரிக்கா எடுத்த 286 ரன்களில் 168 ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்துள்ளது. இதனை குறைத்திருந்தால் தென் ஆப்பிரிக்கா 210-220 ரன்களுக்கு மடிந்திருக்கும். குவிண்டன் டி காக், பிலாண்டர் இணைந்த பிறகும் பவுண்டரிகள் நின்றபாடில்லை, பாண்டியா, புவனேஷ்வர், ஷமி அனைவரும் ஆஃப் வாலி பந்துகளை வாரி வழங்கினர், மீண்டும் பவுண்டரிகளாகக் குவிந்தது. அஸ்வின் 43-வது ஓவர் கொண்டு வரப்பட்டார். டி காக் முதலில் அடித்த நேர் பவுண்டரி அற்புதம், அதன் பிறகு ஆஃப் திசையில் வாங்கு வாங்கினார். 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அவர் 43 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமார் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்துக்கு முன்னால் வந்து ஆட எட்ஜ் ஆகி சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பிலாண்டர் தன் பங்குக்கு அவருக்குக் கிடைத்த ஆஃப் வாலி பந்துகளை கவர் திசையில் பவுண்டரிகளாக விளாசி 23 ரன்கள் எடுத்து ஷமியின் அருமையான இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். இதற்கு முதல் பந்து சற்றே ஷார்ட் ஆக பிட்ச் ஆக இன்ஸ்விங் ஆகி பிலாண்டர் ஆடாமல் விட்ட போது ஸ்டம்புக்கு சற்று மேலே சென்றது, அடுத்த பந்தை இன்னும் கொஞ்சம் முன்னால் வீச இம்முறை ஸ்டம்ப் தொந்தரவு ஆனது. 221/7லிருந்து 286 ரன்கள் வந்ததற்குக் காரணம் ஷிகர் தவண் ஸ்லிப்பில் விட்ட கேட்ச்தான். கேஷவ் மஹராஜ் ஒரு அருமையான வீரரே. அவர் ஏற்கெனவே நன்றாக ஆடி வந்த நிலையில் புவனேஷ்வர் பந்தில் ஆன எட்ஜை ஸ்லிப்பில் தவற விட்டார், விட்டிருந்தால் கோலியே கூட பிடித்திருப்பார், புவனேஷ்வர் குமாரின் 5வது விக்கெட் தவற விடப்பட்டது. கேஷவ் மஹராஜ் அஸ்வினை ஒரு சிக்சர் அடித்தார், இரண்டு பேக்புட் ஷாட்கள் அபாரம். கடைசியில் அஸ்வினிட ரன் அவுட் ஆனார். கேஷவ் மகராஜ் 35 ரன்கள் எடுத்து அவுட்.

இன்னொருவரை இந்தியா அடிக்க விட்டது என்றால் அது ரபாடா, இவர் புவனேஷ்வர் குமாரை ஒரு காட்டு சிக்ஸை மிட்விக்கெட்டில் அடித்தார், இவர் பங்குக்கு 26 ரன்களைச் சேர்த்தார். ஸ்டெய்ன் 16 ரன்கள் சேர்த்தார். ரபாடாவையும், மோர்கெலையும் அஸ்வின் வீழ்த்த தென் ஆப்பிரிக்கா 286 ஆல் அவுட்.

இந்தியா சொதப்பல் தொடக்கம்:

11 ஓவர்களே ஆட வேண்டிய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரை பிலாண்டர் வீச 3-வது பந்து எட்ஜ் ஆனது, ஆனால் கைகளை இறுக்காமல் ஆடியதால் கல்லி வழியாக தவண் கணக்கில் முதல் பவுண்டரி ஆனது. அடுத்த பந்து வெளியே போகுமாறு போக்கு காட்டி லேசாக உள்ளே வந்து தவண் தொடையில் பட்டு பின்னால் சென்றது, பயங்கர முறையீடு நாட் அவுட். அடுத்த பந்தை தவன் மிக அருமையாக எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்தார்

விஜய்க்கு ஸ்டெய்ன் மெய்டன் ஓவர் வீச, பிலாண்டரின் அடுத்த ஓவரில் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய எல்.பி. முறையீடு, அது நாட் அவுட், ஆனால் தென் ஆப்பிரிக்கா ரிவியூ ஒன்றை வேஸ்ட் செய்தது. மீண்டும் தவண், ஸ்டெய்ன் பந்தை எட்ஜ் பவுண்டரி அடித்தார். விஜய் 17 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்த நிலையில் தன் கார்டை மாற்றி ஆஃப் அண்ட் மிடில் கார்ட் எடுத்தார், பிலாண்டர் இன்னும் வைடாக வீசினார், அதனை ட்ரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆகி எக்ல்கரிடம் கேட்ச் ஆக விஜய் அவுட், ஒருவேளை பழைய கார்டில் இருந்திருந்தால் ஆடாமல் விட்டிருக்கலாம், ஆனாலும் தேவையில்லாத ஷாட்.

3 பந்துகள் சென்று ஷிகர் தவண் 16 ரன்களில் இருந்த போது புல் ஷாட் ஆட முடியாத பந்தை புல் ஷாட் ஆட நினைத்து டேல் ஸ்டெய்ன் பந்தில் மிகப்பெரிய கொடியேற்றினார் ஸ்டெய்னே கேட்ச் பிடித்தார். அடுத்த பந்தே ஸ்டெய்ன், கோலிக்கு ஒரு பந்தை எழுப்ப நெஞ்சுயரம் வந்த பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்றார், முன் விளிம்பில் பட்டு ஸ்டெய்னுக்கு சற்று அருகில் விழுந்தது.

கோலி கடைசியில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கெல் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி எழுப்ப அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்த பந்தை எம்பி இருகால்களும் மேலே நிற்க தேவையில்லாமல் தொட்டார் கோலி எட்ஜ் ஆகி டிகாக்கிடம் கேட்ச் ஆனது.

ஆட்ட முடிவில் இந்தியா 28/3. ஆக முதல் 5 ஓவர்களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்துடன் தான் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்தது, இந்திய பேட்ஸ்மென்கள் ஆடுவதைப் பார்த்தால் பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 59 ரன்கள் தேவை என்றுதான் கூற வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x