

மும்பை: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 45.2 ஓவர்களில் 251 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் மன்தீப் சிங் 68, பிரப்ஷிம்ரன் சிங் 58, அபிஷேக் சர்மா 38, சித்தார்த் கவுல் 29, நேஹால் வதேரா 25 ரன்கள் எடுத்தனர்.
தமிழக அணி தரப்பில் பாபா அபராஜித் 3 விக்கெட்களையும் சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 34.2 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்து 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 82 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 12, நாராயண் ஜெகதீசன் 2, பாபா அபராஜித் 3, விஜய் சங்கர் 13, பாபா இந்திரஜித் 25, ஷாருக்கான் 0, சாய் கிஷோர் 0, வருண் சக்ரவர்த்தி 5, நடராஜன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி சார்பில் சித்தார்த் கவுல் 5, பிரேரித் தத்தா 3, மயங்க் மார்க்கண்டே 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.