

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்தில் சுமார் 1,166 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோரும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்னதாக 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்களின் விவரங்களை கடந்த 26-ம் தேதி அறிவித்தன. சில அணிகள் வீரர்களை டிரேடிங் முறையில் மாற்றிக் கொண்டுள்ளன.
இந்த சூழலில் இந்த ஏலத்துக்கு சுமார் 1,166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதில் 830 வீரர்கள் இந்தியர்கள். 336 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். ஏலத்துக்கு பதிவு செய்துள்ள வீரர்களில் 212 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹெட், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் இந்த ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். ஹர்ஷல் படேல், கேதார் ஜாதவ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் ஆகியோர் தங்களது அடிப்படை விலையாக ரூ.2 கோடியை இந்த ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.