Published : 01 Dec 2023 06:20 AM
Last Updated : 01 Dec 2023 06:20 AM

4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ராய்ப்பூர்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும், தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 ஆட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களம் காணவுள்ளது.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணி 222 ரன்களைக் குவித்தபோதிலும், அதை ஆஸ்திரேலிய அணி சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது.எனவே, கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்குபதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இந்திய அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது பனிப்பொழிவால், ஆஸ்திரேலிய வீரர்களின் மட்டைவீச்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்கூறியிருந்தார். பேட்டிங்கில் இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர்.

கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களைக் குவித்தார். இதில் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார் கெய்க்வாட். எனவே, இன்றைய ஆட்டத்திலும் அவரிடமிருந்து அபாரமான இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.

அதேபோன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோரிடமிருந்தும் உயர்மட்ட செயல்திறனை எதிர்பார்க்கலாம்.

ஆனால், பந்துவீச்சில் இந்திய வீரர்கள் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அக்சர் படேல் ஆகியோரிடமிருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

கடந்த ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரின் பந்துவீச்சு மோசமாக இருந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் அதைப் போக்கும்விதமாக இந்திய வீரர்கள்செயல்படுவர் என எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ வேட் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக கடந்த ஆட்டத்தில் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஆனால் கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸம்பா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். மேலும் மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட் ஆகியோரும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்

அவர்களுக்குப் பதிலாக பென் மெக்டர்மட், ஜோஷ் பிலிப்பி, பென் துவரீஷுயிஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் அணியுடன் இணைந்துள்ளனர்.இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்கக் காத்துள்ளனர்.

இரு அணிகளும் இன்று மோதுவது 30-வதுசர்வதேச டி20 போட்டியாகும். இதுவரை நடைபெற்ற 29 ஆட்டங்களில் இந்தியா 17-லும், ஆஸ்திரேலியா 11-லும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x