Published : 30 Nov 2023 06:03 AM
Last Updated : 30 Nov 2023 06:03 AM

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் நீட்டிப்பு

ராகுல் திராவிட்டுடன் இந்திய வீரர்கள்.

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் மற்றும் அவரது உதவி பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் திராவிட், கடந்த2021-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைதொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது 2 வருட ஒப்பந்த காலம் சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்தொடருடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ராகுல் திராவிட்டின் ஒப்பந்த காலத்தை நீட்டிப்பதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.

அவருடன் அவருடைய உதவி பயிற்சியாளர்களான விக்ரம் ரத்தோர் (பேட்டிங்), டி.திலிப் (பீல்டிங்), பராஸ் மாம்ப்ரே (பந்து வீச்சு) ஆகியோரது ஒப்பந்தங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரு வருடங்களில் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை தொடரில் 2-வது இடம் பிடித்திருந்தது.

2-வது முறையாக இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர உள்ள ராகுல் திராவிட் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து தனது புதிய இன்னிங்ஸை தொடங்குகிறார். அடுத்த வார தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி அங்கு 3 டி 20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி 20 தொடர் டிசம்பர் 10-ம் தேதியும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 17-ம் தேதியும் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி செஞ்சூரியன் நகரில் நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஜனவரி இறுதியில் தொடங்கி மார்ச் 2-வது வாரத்தில் முடிவடைகிறது.

ராகுல் திராவிட் கூறும்போது, “இந்திய அணியுடனான கடந்த இரண்டு ஆண்டுகள் மறக்க முடியாதவை. ஒன்றாக, நாங்கள் ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளோம். மேலும் இந்த பயணம் முழுவதும் அணிக்குள் நிலவிய ஆதரவும் தோழமையும் அசாதாரணமானது. வீரர்களின் ஓய்வறையில் நாங்கள் அமைத்த கலாச்சாரத்தை நினைத்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இது வெற்றி அல்லது துன்பத்தின் தருணங்களில் நெகிழ்ச்சியுடன் நிற்கும் ஒரு கலாச்சாரம். எங்கள் குழுவிடம் உள்ள திறன்கள் மற்றும் திறமைகள் அற்புதமானவை. நாங்கள் வலியுறுத்தியது சரியான செயல்முறையைப் பின்பற்றுவது மற்றும் எங்கள் பயிற்சி முறைகளில் ஒன்றி செல்வதாகும். இது ஒட்டுமொத்த முடிவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

என் மீது நம்பிக்கை வைத்து, எனது தொலைநோக்கு பார்வையை அங்கீகரித்து, இந்த காலகட்டத்தில் ஆதரவு அளித்த பிசிசிஐ-க்கு நன்றி. எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் ஆழமாக பாராட்டுகிறேன். திரைக்குப் பின்னால் அவர்களின் பங்கு அபாரமானது. உலகக் கோப்பைக்குப் பிறகு புதிய சவால்களை நாங்கள் ஏற்றுக்கொள்வதால், சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x