

சில்ஹெட்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியின்பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் சதம் விளாசினார்.
சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணிமுதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது. மஹ்மதுல் ஹசன் ஜாய் 86, ஜாகீர் ஹசன் 12, நஜ்முல் ஹோசைன் ஷான்டோ 37, மொமினுல் ஹக் 37, முஸ்பிகுர் ரகிம் 12,ஷஹதத் ஹோசைன் 24, மெஹிதி ஹசன் 20, நூருல் ஹசன் 29, நயீம்ஹசன் 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஷோரிபுல் இஸ்லாம் 13, தைஜூல் இஸ்லாம் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டிம் சவுதி வீசிய முதல் பந்திலேயே ஷோரிபுல் இஸ்லாம் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். முடிவில் 85.1 ஓவரில் வங்கதேச அணி 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.கைல் ஜேமிசன், அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் டிம் சவுதி, இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 84 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான டாம் லேதம் 21 ரன்னில்தைஜூல் இஸ்லாம் பந்திலும்,டேவன் கான்வே 12 ரன்னில் மெஹிதி ஹசன் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
விரைவாக ரன்கள் சேர்க்கமுயன்ற ஹென்றி நிக்கோல்ஸ் 54 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய டாம் பிளண்டல் 6 ரன்னில் நயீம்ஹசன் பந்தில் நடையை கட்டினார்.சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்த போதிலும் நிலைத்து நின்று விளையாடிய கேன் வில்லியம்சன் தனது 29-வது சதத்தை விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கிளென்பிலிப்ஸ் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் மொமினுல்ஹக் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். நிதானமாக விளையாடிய கேன் வில்லியம்சன் 205 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் போல்டானார். இதன் பின்னர் களமிறங்கிய இஷ் சோதி ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார்.
கைல் ஜேமிசன் 7, டிம் சவுதி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். வங்கதேசம் அணி சார்பில் தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷோரிபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன், நயீம் ஹசன், மொமினுல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 2 விக்கெட்கள் இருக்க 44 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூஸிலாந்து அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.