

மும்பை: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழக அணி, பரோடாவை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
விஜய் ஹசாரே தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று தனது 3-வது லீக் ஆட்டத்தில் பரோடாவை எதிர்த்து விளையாடியது. மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி 33.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 51 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் ஷாருக்கான் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும் எடுத்தனர்.
சாய் சுதர்சன் 15, நாராயணன் ஜெகதீசன் 0, சாய் கிஷோர் 8, பாபா அபராஜித் 0, விஜய் சங்கர் 11, பாபா இந்திரஜித் 5, சந்தீப் வாரியர் 1, நடராஜன் 1 ரன்னில் நடையை கட்டினர். பரோடா அணி சார்பில் லுக்மான் மேரிவாலா 4, நினாத் ரத்வா 3, மகேஷ் பித்தியா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பரோடா அணி 23.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விஷ்ணு சோலங்கி 25, பார்கவ் பாத் 21, ஷஸ்வத் ரவாத் 18 ரன்கள்சேர்த்தனர். பந்து வீச்சில் தமிழக அணி சார்பில்நடராஜன் 4, வருண் சக்ரவர்த்தி 3, சாய் கிஷோர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.