

2018-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.) போட்டிக்கான ஏலத்துக்கு 578 வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இதில் 36 நட்சத்திர வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு ஐ.பி.எல். சீசன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சூதாட்ட சர்ச்சையில் விதிக்கப்பட்ட தடை முடிந்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு கலந்து கொள்கின்றன. இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்கின்றன, 60 ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்த ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் வரும் 27, 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக 1,122 வீரர்களில் 578 வீரர்கள் ஏலத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 360 இந்திய வீரர்கள், 218 வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மார்கியூ பிளேயர்ஸ் என்று அழைக்கப்படும் நட்சத்திர வீரர்கள் 36 பேர் உள்ளனர். இதில் 18 வீரர்களே ஏற்கெனவே 8 அணிகளும் தக்க வைத்துள்ளன.
இந்த 18 நட்சத்திர வீரர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இவர் தவிர்த்து, கிறிஸ் கெயில், மிட்ஷெல் ஸ்டார்க், யுவராஜ் சிங், கிரண் பொலார்ட், ஆர். அஸ்வின், கவுதம் கம்பீர், சிக்கார் தவான், மேக்ஸ்வெல், அஜின்கயா ரகானே, ஹர்பஜன் சிங், ஜோய் ரூட், சாகிப் அல் ஹசன், டூ பிளசி, டுவைன் பிராவோ, கேன் வில்லியம்சன் ஆகியோர் கவனம் பெறுகின்றனர். இதில் பல வீரர்களை எந்த அணியைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர்களே தக்கவைக்கவும் வாய்ப்புள்ளது.
இது தவிர அனுபவம் கொண்ட அஸ்வின், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோருக்கும் நல்ல கிராக்கி ஏற்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே 3 வீரர்களை தக்கவைத்துவிட்டது, இருந்தபோதிலும், அஸ்வினை எப்படியேனும் ஏலத்தில் எடுப்போம் என தோனி தெரிவித்துள்ளார். மேலும், டூ பிளசி, பிராவோ ஆகியோரும் சி. எஸ்.கே.வுக்கு செல்ல வாய்ப்பு உண்டு
அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்பஜனையும், சன் ரைசர்ஸ் அணி யுவராஜ் சிங்கையும் தக்கவைக்கலாம்.
ஐ.பி.எல். போட்டிக்கு அறிமுகமாகும் வீரர்களை அணி நிர்வாகங்கள் முதல் நாள் ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் இசாந்த் சர்மா, முகம்மது சமி, உமேஷ் யாதவ், ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷெல் ஜான்சன், நியூசிலாந்து வீரர் டிம் சவுதி ஆகியோருக்கும் நல்ல விலை கிடைக்கும்.
அதேபோல அறிமுக வீரர் குர்னல் பாண்டயா அதிகமான விலையில் ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், கேன் வில்லியன்சன், ஜோய் ரூட் ஆகியோரும் முதல்முறையாக ஏலத்துக்கு வருகின்றனர்.
இளம் வீரர்களில் யுவேந்திர சாகல், கே.எல். ராகுல், முரளி விஜய், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கரன் சர்மா ஆகியோர் அணி மாறவும், நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த முறை ஏலத்துக்கு 36 வீரர்களின் (இந்தியர்கள் 13, வெளிநாட்டு வீரர்கள் 23) அடிப்படை விலை ரூ. 2 கோடியாகவும், 32 வீர்கள்(5, 27) அடிப்படை விலை ரூ.1.5 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 31 வீரர்கள் (9, 22) அடிப்படை விலை ரூ. ஒரு கோடியாகவும், ரூ. 75 லட்சம் அடிப்படை விலையில் 23 ( 5,18), 50 லட்சம் அடிப்படை விலையில் 122 வீரர்கள் (30, 92) உள்ளனர்.