புவனேஷ்வர் குமாரை ஏன் நீக்க வேண்டும்? - ‘ஸ்விங் கிங்’ ஃபானி டிவிலியர்ஸ் ஆச்சரியம்

புவனேஷ்வர் குமாரை ஏன் நீக்க வேண்டும்? - ‘ஸ்விங் கிங்’ ஃபானி டிவிலியர்ஸ் ஆச்சரியம்
Updated on
1 min read

ஃபானி டிவில்லியர்ஸ் ஒரு மிகப்பெரிய தென் ஆப்பிரிக்க ஸ்விங் பவுலர், ஆலன் டோனல்டுடன் இணைந்து 90களில் முன்னணி பேட்ஸ்மென்களை ஸ்விங்கினால் அச்சுறுத்தியவர்.

ரிச்சர்ட் ஹாட்லியுடன் ஒப்பிடக்கூடிய ஒரே பவுலர் ஃபானி டிவில்லியர்ஸ், அவர் புவனேஷ்வர் குமாரை உட்காரவைத்த கோலி, ரவிசாஸ்திரியின் அராஜக முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு ஃபானி டிவில்லியர்ஸ் கூறும்போது, “புவனேஷ்வர் குமார் வலது கை பேட்ஸ்மென்களுக்கு பந்தை வெளியே ஸ்விங் செய்கிறார், இடது கை பேட்ஸ்மென்களுக்கும் பந்தை அருமையாக வெளியே கொண்டு செல்கிறார்., இதற்கு மேல் என்ன வேண்டும்? அவர் உண்மையில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு பவுலர், அவர் எப்போதும் அணியில் இருக்க வேண்டும்.

உலக கிரிக்கெட் முழுதுமே ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமாக பந்தை பிட்ச் செய்து வலது கை பேட்ஸ்மென்களுக்குப் பந்தை வெளியே கொண்டு செல்பவர்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பவுலர்களாகக் கருதப்படுகின்றனர். பெரிய வேகம் தேவையில்லை, மெக்ரா, ஷான் போலக், பிலாண்டர் ஆகியோரைப் பாருங்கள்.

இஷாந்த் சர்மாவின் பிரச்சினை என்னவெனில் அவர் இன்ஸ்விங்கர்களை வீசுபவர், எப்போதாவதுதான் பந்தை வெளியே எடுக்கிறார். இதேதான் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் பொருந்தும் இவரும் பந்தை உள்ளே செலுத்துபவர்தான். இது டெஸ்ட் போட்டிகளுக்கு அவ்வளவாக பொருந்தக் கூடியதல்ல. ஹர்திக் பாண்டியா பிரதானமாக பேட்ஸ்மென் ஆனால் கொஞ்சம் பவுலிங் செய்பவர் அவ்வளவே.

மொகமது ஷமியிடம் அருமையான ரன் அப், வேகம், அவுட் ஸ்விங்கர் உள்ளது, அவரை பஞ்சில் சுற்றி வைத்து இந்திய அணி பாதுகாக்க வேண்டும்.

குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் ஸ்லிப் அதிகம் வைக்க முடியாத நிலையில் பவுலர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த பந்துகளை உள்ளே கொண்டு வருகின்றனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது பொருந்தாது.

இந்திய பேட்ஸ்மென்கள் தங்கள் நாட்டில் ஆடுவது போல் காலை முன்னால் போட்டு ஆடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இங்கெல்லாம் பின்னால் சென்று அதிக பந்துகளை எதிர்கொள்வதே நலம். ஆட்டம் போகப்போக இந்தப் பிட்ச் இன்னும் வேகம் காட்டும் 350 ரன்கள் இந்தப் பிட்சில் நல்ல ஸ்கோராகும்” இவ்வாறு கூறினார் ஃபானி டிவில்லியர்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in