Published : 28 Nov 2023 07:47 AM
Last Updated : 28 Nov 2023 07:47 AM
சென்னை: ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் அரை இறுதி சுற்றில் தமிழ்நாடு அணியை ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான ஹரியாணா அணி. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ஹரியாணா. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவுடன் மோதுகிறது.
ஆடவருக்கான 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர்ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 28 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, கர்நாடகா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் நேற்று அரை இறுதி சுற்று நடைபெற்றது.
முதல் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு, நடப்பு சாம்பியனான ஹரியாணாவை எதிர்த்து விளையாடியது. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 41-வது நிமிடத்தில் ஹரியாணா அணியின் அபிஷேக் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தமிழ்நாடு அணி, கோல் அடிக்க கிடைத்தபல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளத் தவறியது.
போட்டி முடிவடைய சில விநாடிகளே இருந்த நிலையில் தமிழ்நாடுஅணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சோமன்னா கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஹரியாணா சார்பில் சஞ்சய், ரஜந்த், அபிஷேக், ஜோகிந்தர் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். யாஷ் தீப் சிவாச்சின் கோல் அடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அணி தரப்பில் கனகராஜ் செல்வராஜ், கார்த்தி செல்வம் ஆகியோரது கோல் அடிக்கும் முயற்சியை ஹரியாணா அணியின் கோல் கீப்பர் பவன் தடுத்தார். மாரீஸ்வரன் சக்திவேல், சுந்தர பாண்டி ஆகியோர் கோல் அடித்தனர்.
முடிவில் ஹரியாணா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுஇறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பஞ்சாப் அசத்தல்.. 2-வது அரை இறுதி ஆட்டத்தில் கர்நாடகா - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பஞ்சாப் அணி சார்பில் ஹர்மன்பிரீத் சிங் இரு கோல்களும் (39, 44-வது நிமிடங்கள்) ஷம்ஷேர் (4-வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (13-வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (45-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். கர்நாடகா அணி சார்பில் அபரன் சுதேவ் (8-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஹரியாணா - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக 1.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT