Published : 28 Nov 2023 07:34 AM
Last Updated : 28 Nov 2023 07:34 AM
மலாகா: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் 47 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது இத்தாலி அணி.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி ஸ்பெயினில் உள்ள மலாகா நகரில் நடைபெற்றது. பட்டம் வெல்வதற்கான இந்த ஆட்டத்தில் இத்தாலி - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரினை எதிர்த்து விளையாடினார். இதில் மேட்டியோ அர்னால்டி 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இத்தாலி 1-0 என முன்னிலை பெற்றது.
2-வது ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர்,ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஜன்னிக் ஷின்னர் 6-3, 6-0 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த மோதலில் 2-0 என வெற்றி பெற்ற இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது. டேவிஸ் கோப்பை தொடரில் இத்தாலி 47 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பட்டம் வென்றுள்ளது.
கடைசியாக இத்தாலி 1976-ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்தது. இதற்கு முன்னர் 3 முறையும், 1976-ம் ஆண்டுக்கு பின்னர் 3 முறையும் இத்தாலி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. இதில் 3 முறை ஆஸ்திரேலியாவிடமே இத்தாலி தோல்வி கண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT