Published : 28 Nov 2023 07:29 AM
Last Updated : 28 Nov 2023 07:29 AM
குவாஹாட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி 20கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் உள்ள பர்சபரா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி டி 20 தொடரை 3-0 என தன்வசப்படுத்திக் கொள்ளும்.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் குவாஹாட்டியில் இன்று நடைபெறும் 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை மீண்டும் சந்திக்கிறது இளம் வீரர்களை உள்ளடக்கிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்கத்திலும் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நடு வரிசையிலும் ரிங்கு சிங் இறுதிக்கட்ட ஓவர்களிலும் அதிரடியாக செயல்படுவது அணிக்கு பலம் சேர்க்கிறது. போட்டி நடைபெறும் பர்சபரா மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இல்லாமல் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி சற்றுதடுமாறி வருகிறது. எனினும் இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT