Published : 04 Jul 2014 03:03 PM
Last Updated : 04 Jul 2014 03:03 PM

இங்கிலாந்து தொடர்: 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

டெர்பிஷயர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெர்பிஷயர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 156/3 என்று மிகவும் ஸ்போர்ட்டிவ் மனோபாவத்துடன் டிக்ளேர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் வெற்றி இலக்கு 142 ரன்கள். இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ரன்களை 36.3 ஓவர்களில் எடுத்தது இந்தியா. ஒருவழியாக முரளி விஜய் ரன்கள் எடுத்தார். அவர் 53 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார்.

தவான் மீண்டும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார். அவர் ஹிங்கிங்பாட்டம் என்பவரது பந்து வீச்சில் எல்.பி. ஆனார். அதன் பிறகு விஜய், ரஹானே 2வது விக்கெட்டுக்காக 63 ரன்கள் சேர்த்தனர்.

ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் சிறிது நேரம் அதிகமாக பேட்டிங் செய்யக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டைவிட்டார் 10 ரன்களில் அவர் இடது கை ஸ்பின்னர் டேவிட் வெய்ன்ரைட் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விருத்திமான் சாஹா 19 ரன்களுக்கு நன்றாக ஆடினார். ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிரெக் கார்க்கிடம் வீழ்ந்தார்.

பிறகு கம்பீர் (21), ஜடேஜா (0) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய வெற்றி ஆட்டம் முடிய அரை மணி நேரம் முன்பாக வந்தது.

முன்னதாக தோனி இந்திய முதல் இன்னிங்ஸை 2ஆம் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்ய இந்தியா பந்து வீசக் களமிறங்கியது. மொகமட் ஷமி காயத்திலிருந்து மீண்டு உத்வேகத்துடன் வீசினார். டெர்பி துவக்க வீரர் பால் போரிங்டனை அபார இன்ஸ்விங்கரில் எல்.பி. செய்தார்.

11 ஒவர்கள் வீசினார் முகமது ஷமி. இஷாந்த் சர்மா 7 ஓவர்கள் வீசி 10 ரன்களையே விட்டுக் கொடுத்தார். முதல் பயிற்சி ஆட்டம், மற்றும் 2வது பயிற்சி ஆட்டம் முதல் இன்னிங்ஸ் நோ-பால்களுக்குப் பிறகு இந்த இன்னிங்ஸில் நன்றாக வீசினார்.

ஸ்டூவட் பின்னி 6 ஓவர்கள் 2 மைடன்களுடன் 17 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி மீண்டும் தேர்வாளர்களை தன் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார். பேட்டிங்கிலும் 81 ரன்கள் எடுத்தார். ஆனால் அஸ்வின் 5 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்தது இந்திய அணிக்குக் கவலைகளை ஏற்படுத்தியிருக்கலாம்.

லீசெஸ்டர் அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு டிரா ஆனது. வரும் 9ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x