Published : 20 Jan 2018 10:32 AM
Last Updated : 20 Jan 2018 10:32 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ரபேல் நடால், ஸ்விட்டோலினா; இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடிகள் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 4-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 28-ம் நிலை வீரரான போஸ்னியாவின் தமிர் ஸூம்கூரை எதிர்த்து விளையாடினார். 1 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 30-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலெவையும், 6-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் 7-6 (7-4), 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ரேயன் ஹாரிசனையும், 10-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்ரெனோ பஸ்டா 7-6 (7-4), 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் 23-ம் நிலை வீரரான லக்சம்பர்க்கின் முல்லரையும், 17-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் 7-6 (7-5), 4-6, 7-6 (8-6), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான பிரான்சின் ஜோ வில்பிரட் சோங்காவையும் வீழ்த்தி 4-வது சுற்றில் நுழைந்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா தனது சகநாட்டு வீராங்கனையான 15 வயதான மார்தா கோஸ்ட்யுக்கை 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வீழ்த்தி 4-வது சுற்றில் கால்பதித்தார். மற்ற ஆட்டங்களில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் லூஸிகாவையும், செக் குடியரசின் டெனிசா ஆலர்டோவா 6-1, 6-4 என்ற நேர் செட்டில் போலந்தின் மெக்டா லினெட்டையும், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் அலிஸ் கார்நெட்டையும் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.

போபண்ணா ஜோடி

ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 4-6, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபேபியோ போக்னி, ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ் ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த வெற்றியால் திவிஜ் சரண் ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் எட்வர்டு ரோஜர் வாஸலின் ஜோடி 6-2, 7-6 என்ற நேர் செட்டில் போர்ச்சுக்கலின் ஜோவோ சோசா, அர்ஜென்டினாவின் லியோனார்டோ மேயர் ஜோடியை வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x