Last Updated : 23 Nov, 2023 03:37 PM

1  

Published : 23 Nov 2023 03:37 PM
Last Updated : 23 Nov 2023 03:37 PM

கடலூர் ஊருக்குள்ளே கைப்பந்து விளையாட்டில் கலக்குறாங்க!

கைப்பந்து பயிற்சி பெறும் மாணவிகளுடன் கடலூர் மெட்ரோ நண்பர்கள் கையுந்து கழக நிர்வாகிகள்.

கடலூர்: கைப்பந்து (வாலி பால்) விளையாட்டில் ஆர்வமுள்ள பலருக்கு, ‘கடலூர் மெட்ரோ நண்பர்கள் கையுந்து கழகம்’ இலவச பயிற்சி வழங்கி வருகிறது. இதன் மூலம் பலர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர். கடலூர் வரதராஜன் நகர் பூங்காவில் இயங்கி வருகிறது ‘கடலூர் மெட்ரோ நண்பர்கள் கையுந்து பந்து கழகம்.’ கடந்த 1975-ம் ஆண்டு இக்கழகம் தொடங்கப்பட்டது. இதில், தற்போது 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கையுந்து கழகத்தின் செயலாளர் சிவா பாலசங்கர் தனது குழுவினருடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறார்.

“நல்ல உடல் நலத்துடன், மன ஒருமைப்பாட்டை தரும் விதமாக, நாங்கள் விரும்பி பயின்ற, இந்த கைப்பந்து பயிற்சியை வளரும் இளையோருக்கு அளிக்கிறோம்” என்று இக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர். கடந்த 48 ஆண்டுகளாக தொடரும் இந்த கழகத்தினரின் சேவையால் காவல்துறை, மின்வாரியம், அரசு போக்குவரத்துக் கழகம், இந்தியன் ரயில்வே, ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகள், உணவு பாதுகாப்பு கழகம், மத்திய சுங்க மற்றும் கலால், ரயில் பெட்டி தொழிற்சாலை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்டவைகளில் விளையாட்டுக்கான ஒதுக்கீட்டின் கீழ் 40 பேர்பணியில் சேர்ந்து, பணியாற்றி வருவதை இக்கழகத்தினர் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.

பயிற்சி மைய வீரர் குருபிரசாத் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று விளையாடி கடலுார் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். பெண்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில், 2022 -ம் ஆண்டு டிசம்பர் முதல்பெண்களுக்கான பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இக்கழகத்துடன் இணைந்து பயிற்சி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இப்பள்ளியின் மாணவி கிருதிக்ஷா மாநில அளவில் தேர்ச்சி பெற்று, தற்போது ஒடிஸாவில் நடைபெற உள்ள அகிலஇந்திய பள்ளிகளுக்கான கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக பங்கேற்க உள்ளார். இப்படி பலரை உருவாக்கி வரும் இந்தக் கழகம் பொன் விழாவில் அடியெடுத்து வைக்க உள்ளது. இதுபற்றி கையுந்து கழகத்தின் செயலாளர் சிவா பாலசங்கர் கூறுகையில, “விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், தமிழக மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தேன். விளையாட்டால் நான் ஆரோக்கியமாக உணர்கிறேன். 10 ஆண்டுகள் தொடர்ந்து, தமிழக மின்வாரியம் சார்பில் இந்திய அளவிலான மின்வாரிய அணியில் விளையாடினேன்.

கிராமப்பகுதி இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் என் போல், கைப்பந்தில் ஆர்வம் உள்ள தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த மணியன் என்பவரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு, ரயில்வே துறையில் பணியாற்றும் மகாராஜா, விக்கி இருவரையும் துணை பயிற்சியாளர்களாக கொண்டு மற்றும் தனியார் துறையில் சேஃப்டி இன்ஜினீயர் ஆக பணியாற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து இந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பலர் தொடர் பயிற்சி பெற்று மாநில, தேசிய அளவில் விளையாடி, சிறப்பிடம் பெற்று, அரசு பணியில் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து இலவச பயிற்சி அளித்து, தகுதியான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே எங்களது கழகத்தின் நோக்கம்” என்கிறார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x