Published : 21 Nov 2023 05:05 PM
Last Updated : 21 Nov 2023 05:05 PM

இந்திய அணி உடனான டி20 தொடர் - டேவிட் வார்னர் விலகல்

மும்பை: இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

வரும் வியாழக்கிழமை முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இந்தியாவின் விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், குவஹாத்தி, ராய்ப்பூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அடங்கிய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். அதேபோல் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அந்த அணியின் சீனியர் வீரர் டேவிட் வார்னர் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பை திரும்பப்பெற்றுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். வார்னர் இடம்பெறாததற்கான காரணங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விளக்கியுள்ளது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து வார்னர் நாடு திரும்ப விருப்பப்பட்டதை தொடர்ந்தே அவர் அணியில் இடம்பெறவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வார்னருக்கு பதிலாக ஆரோன் ஹார்டி ஆஸ்திரேலிய அணியின் ஒப்பனராக களம் காணுவார்.

தற்போதைய நிலையில், ஒயிட் பால் கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள டேவிட் வார்னர், அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை மற்றும் 2025ல் பாகிஸ்தானில் நடைபெறும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி வரை ஓய்வு பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி விவரம்: மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். கடைசி இரண்டு டி20 போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x