Last Updated : 18 Nov, 2023 06:29 AM

Published : 18 Nov 2023 06:29 AM
Last Updated : 18 Nov 2023 06:29 AM

இந்திய பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ராகவேந்திரா

குழந்தை முகம், கூச்ச சுபாவம், வேகப்பந்து வீச்சாளருக்கான உயரமோ, தோரணையோ இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியின் போது களத்தில் நுழையும் முதல் நபரும், கடைசியாக வெளியேறுபவருமாகவும் திகழ்கிறார் அனைவராலும் அறியப்படாத ஹீரோவான ‘த்ரோடவுன்’ ஸ்பெஷலிஸ்ட் ராகவேந்திரா. இவரை ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் செல்லமாக ரகு என்றே அழைக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா முதல் ரவீந்திர ஜடேஜா வரை உள்ள பேட்டிங் வரிசை அந்நிய ஆடுகளங்களிலும், இந்திய ஆடுகளங்களிலும் வெளிநாட்டு வீரர்கள் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பந்துகளையும் சாதாரணமாக விளாசுகிறார்கள் என்றால் இதற்கு பின்னால் ராகவேந்திராவின் கடின உழைப்பு இல்லாமல் இல்லை.

ஒவ்வொரு முறையும் இந்திய அணி பயிற்சி அமர்வுக்கு வரும் போதெல்லாம் ராகவேந்திரா அனைத்து பேட்ஸ்மேன்களையும் தனது வேகம், பவுன்ஸ், ஸ்விங் ஆகியவற்றால் கடுமையாக சோதிப்பார். வலை பயிற்சியில் ‘சைடுஆர்ம்’ உதவியுடன் 140 முதல் 150 கி.மீ வேகத்தில் பேட்ஸ்மேன்களை நோக்கி ஏவுகணைகளை போன்று அசுர வேகத்தில் பந்துகளை வீசுவார். அவரது தனித்துவமான திறனுக்காக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராகவேந்திராவை அணியில் உள்ள ஒரே ‘வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்' என்று அழைத்து வந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்களில் ராகவேந்திராவும் தவிர்க்க முடியாதவராக திகழ்கிறார். வேகமான, துல்லியமான மற்றும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலான வேகப்பந்துவீச்சைக் கையாளும் வகையில் ஆடுகளத்தின் நடுப்பகுதியில் பந்துகளை கண்ணிமைக்கும் நேரத்தில் த்ரோ செய்து பேட்ஸ்மேன்களின் திறன்களை ராகவேந்திரா மெருகேற்றி உள்ளார். ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை த்ரோ வீசுவதில் அவர், திறம்பட செயல்பட்டுள்ளார். இதனாலேயே அவரது கையை ‘கோல்டன் ஹேண்ட்’ என்று கூட அழைப்பார்களாம்.

தொடக்க காலக்கட்டங்களில் த்ரோடவுனால் ராகவேந்திராவின் வலது கை அபரிமிதமான தேய்மானத்தை தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் காலப் போக்கில் நவீன கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி கிரிக்கெட் பந்தைப் பிடிக்கும் வகையில், நீண்ட ஸ்பூன் போன்ற வடிவிலான உபகரணமான ‘Sidearm' பயன்படுத்தத் தொடங்கினார். அவர், பந்துகளை மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்போது பேட்ஸ்மேன்கள் சமநிலை, பேட் ஸ்விங்கை சரியாகப் பெற உதவுகிறது.

தோனி ஒரு முறை ராகவேந்திராவை வெகுவாக பாராட்டியிருந்தார். ராகவேந்திரா தொடர்ச்சியாக வேகமாக பந்து வீசக்கூடியவர் மட்டும் கிடையாது. எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரும் செய்யாத முக்கியமான ஒன்றையும் செய்யக்கூடியவர். மார்னே மோர்கல், மிட்செல் ஸ்டார்க்கைப் போல விறுவிறுப்பாக செயல்பட்டு கணுக்காலை தாக்கும் வகையிலும், துல்லியமான லென்ந்த்தில் ஸ்டெம்புகளை தகர்க்கும் வகையில் வீசும் திறன் கொண்டவர் என சிலாகித்து இருந்தார்.

இதுபோன்ற பந்து வீச்சுகளைத்தான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவில் வேகமான மற்றும் பவுன்ஸ் ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது கடினமாகவே இருந்து வந்தது. ஆனால் ராகவேந்திராவின் வருகைக்கு பின்னர் வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. இதை ஒரு முறை விராட் கோலியே ஒப்புக்கொண்டார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒரு முறைவிராட் கோலி 4 சதங்கள் அடித்து வியக்க வைத்திருந்தார். பயிற்சி அமர்வுகளில் ராகவேந்திரா அசுர வேகத்தில் பந்துகளை வீசுவதனாலேயே ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல்ஸ்டார்க் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம்தொடுப்பதற்கு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உந்துதல் கிடைத்துள்ளது. உலக கிரிக்கெட் அணிகளில் வெளிநாடுகளுக்கு தேசிய அணியுடன் பயணிக்கும் ஒரே த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ராகவேந்திரா மட்டுமே.

தனது சிறு வயதில் மற்றவர்களைப் போலவே, இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் விருப்பத்தைக் கொண்டிருந்தார் ராகவேந்திரா. தனது சிறப்புத் திறன்களில் கூடுதலாக பணியாற்றினார். எனினும் அவர் விரும்பியபடி இந்தியஅணியில் வேகப்பந்து வீச்சாளராக தடம்பதிக்கமுடியவில்லை. ஆனாலும் அவர், சோர்ந்துவிடவில்லை. கடினமாக உழைத்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்களில் ஒருவராக தனது இடத்தை பலப்படுத்திக் கொண்டுள்ளார்.

வடக்கு கர்நாடகாவில் உள்ள கும்தா கிராமத்தைச் சேர்ந்த ராகவேந்திரா, 1990-ம் ஆண்டு காலக்கட்டங்களின் பிற்பகுதியில் தனது லட்சியத்தை அடைவதற்காக படிப்பை பாதியில் விட்டு வீட்டிலிருந்து வெளியேறி மும்பைக்கு சென்றார். ஆனால் அவருக்கு சாதகமாக எதுவும் அமையாததால் மீண்டும் கர்நாடகா திரும்பினார். பின்னர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றார், அங்கு பயிற்சி மற்றும் மறுவாழ்வுக்காக வரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அவர், த்ரோடவுன்களை வழங்கினார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் வலைகளில்பல மணிநேரம் செலவழித்து தனது தனித்துவமான திறமையை வளர்த்துக் கொண்டார். அங்குதான் அவர், ராகுல் திராவிட்டால் ஈர்க்கப்பட்டார். இதன் பின்னரே தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்த இந்திய வீரர்களுக்கு த்ரோடவுன்களை வழங்க அவர், பணியமர்த்தப்பட்டார். த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ஆக உருவெடுத்த காலத்தில் ராகவேந்திரா, வலை பயிற்சியில் தனியாகவே 3 முதல் 4 மணி நேரங்கள் பந்துகளை வீசி கடினமாக உழைப்பாராம்.

ராகவேந்திராவின் திறன் வெகுவிரைவாகவே சச்சின் டெண்டுல்கரையும் கவர்ந்தது. தனிப்பட்ட முறையில் ராகவேந்திராவை மும்பைக்கு அழைத்து சில பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார் சச்சின். இந்திய கிரிக்கெட்டின் இரு ஜாம்பவான்களின் நன்மதிப்பை பெற்றராகவேந்திரா, 2011-ம் ஆண்டு முறைப்படி இந்திய கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களில் கூடுதல் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரு பேட்ஸ்மேனின் வெற்றிக்குப் பின்னால் வேலை செய்பவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. ஆனால் ராகவேந்திராவின் அர்ப்பணிப்பு என்பது அதை கடந்து நிற்கிறது.

அடக்கம், கூச்ச சுபாவம் மற்றும் பக்தி கொண்ட ராகவேந்திரா எப்போதும் நெற்றியில் குங்குமத் திலகம் அணிந்திருப்பார். இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலில், அவர் மிகவும் பரபரப்புடனே காணப்படுவார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் முன்னதாக வீரர்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு டிக்கெட்கள் வழங்கும் பணியை கையாள்வது, வீரர்கள் சொல்லி அனுப்பும் தகவல்களை பரிமாறுவது என புன்னகையுடன் ஓடிக்கொண்டே இருக்கிறார் 38 வயதான ராகவேந்திரா. அவரின் திறமையை கண்டு இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாட்டு அணிகளும் ஏன்? கோடிக்கணக்கில் புரளும் ஐபிஎல் தொடரின் சில அணிகளும் கூட துணை பயிற்சியாளராக செயல்பட அணுகினார்கள். ஆனால், அவற்றுக்கு ராகவேந்திரா மயங்காமல் இந்திய அணியுடனேயே அர்ப்பணிப்புடன் பயணிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x