Published : 18 Nov 2023 06:21 AM
Last Updated : 18 Nov 2023 06:21 AM

இறுதிப் போட்டிக்காக பிரம்மாண்டமாக தயாராகும் நரேந்திர மோடி மைதானம்: விமான சாகசங்கள், இசை நிகழ்ச்சி, லேசர் ஷோ

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தின் வான்பகுதியில் சாகச ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் சூரியகிரண் குழுவினர்.

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்துகொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியையும், ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் நாளை (19-ம் தேதி) மோதுகின்றன. இந்த ஆட்டம் உலகின் மிகப்பெரிய மைதானமான 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. கடைசியாக இரு அணிகளும் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தன. அப்போது கங்குலி தலைமையிலான இந்திய அணி பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது.

ஆனால் இம்முறை இந்திய அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டு 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கிறது இந்திய அணி. அதேவேளையில் 5 முறை வாகை சூடியுள்ள ஆஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. இந்நிலையில்இறுதிப் போட்டி தொடக்க விழாவை பிரம்மாண்டமான முறையில் 4 கட்டங்களாக நடத்தசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், பிசிசிஐ-யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இறுதிப் போட்டியின் நாளில் பகல் 12 மணிக்கு இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளனர். சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் சுமார் 10 நிமிடங்கள் மைதானத்துக்கு மேலே உள்ள வான் பகுதியில் சாகசம் புரிய உள்ளது. உலகக் கோப்பைவரலாற்றில் முதன்முறையாக விமானப்படையின் சாகசம் நடைபெற உள்ளது.

முதல் இன்னிங்ஸ் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 500 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளனர்.

2-வது பேட்டிங்கின் போது 2-வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையின் போது 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும்,வெற்றி கோப்பையை சாம்பியன்அணி கைகளில் ஏந்தும் போது 1,200 டிரோன்கள் கொண்டு வானில் உலகக்கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்க உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x