

அகமதாபாத்: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. இதையடுத்து இந்திய அணி வியாழன் மாலையும், ஆஸ்திரேலிய அணி வெள்ளிக்கிழமையும் நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்தடைந்தது.
இதனிடையே, உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸும் நேரில் காண உள்ளனர்.
இதையடுத்து போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு நடத்தினார். மைதானம், அணிகள், விஐபிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தை கவனிப்பதற்கு என 4,500 காவலர்களை ஈடுபடுத்துவது என அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக, உலகக் கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு அன்றைய தினம் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற சூர்ய கிரண் ஏரோபாட்டிக்ஸ் குழு விமான கண்காட்சியை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.