சச்சினின் 100 சதங்கள் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார்: ரவி சாஸ்திரி நம்பிக்கை

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி
Updated on
1 min read

மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தனது 50-வது சதத்தை விளாசினார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறிடியத்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்களை விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற மகத்தான வரலாற்று சாதனையையும் நிகழ்த்தினார்.

ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள், டெஸ்ட் போட்டியில் 29 சதங்கள், டி 20-ல் ஒரு சதம் என ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான ஆட்டங்களிலும் 80 சதங்களை இதுவரை அடித்துள்ளார் விராட் கோலி. இந்த வகையிலான சாதனையில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும், டெஸ்டில் 51 சதங்களையும் என ஒட்டுமொத்தமாக 100 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் இந்த 100 சதங்கள் சாதனையையும் முறியடிக்கும் திறன் விராட் கோலியிடம் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எந்த வீரராவது நெருங்கி வருவார் என யாராவது நினைத்திருப்பார்களா? தற்போது விராட் கோலி 80 சதங்களை அடித்துவிட்டார். இந்த 80 சர்வதேச சதங்களில், 50 சதங்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கப்பட்டவை. இது அவரை மேலும் உயர்த்தி உள்ளது. முடியாதது எதுவுமில்லை, ஏனென்றால் விராட் கோலி போன்ற வீரர்கள், சதம் அடிக்கத் தொடங்கும்போது,அவற்றை மிக விரைவாக அடிக்கிறார்கள். அந்த வகையில் விராட்கோலி அடுத்த 10 இன்னிங்ஸ்களில், மேலும் 5 சதங்கள் அடிப்பதை காண முடியும்.

அவர், 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அங்கம் வகிக்கிறார். இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாடுவார் என நினைக்கிறேன். இதனால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்கும் திறன் விராட் கோலியிடம் இருப்பதாக நான் கருதுகிறேன். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர், நிதானமாகவும் கிரீஸுக்குள் அமைதியாகவும் செயல்பட்டு தனது ஆட்டத்தை கட்டமைக்கிறார். இதற்கு முந்தைய உலகக் கோப்பைகளில் அவர், சூடான வீரராகவே இருந்தார்.

ஆனால் தற்போது அப்படிஇல்லை. தனக்கான நேரத்தை எடுத்துக் கொள்கிறார், அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்கிறார். பேட்டிங்கில் தனது பணி என்ன என்பதை புரிந்து கொண்டு, நிலைத்து நின்று விளையாடுகிறார். விராட் கோலி அற்புதமான வீரர். அவரது பேட்டிங்கின் சிறப்பம்சங்களில் ஒன்று ஆடுகளத்துக்கு இடையே அற்புதமாக ஓடுவதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in