ODI WC 2023 1st Semi-Final | ரோகித் சர்மா அதிரடி; ஆனால் அரைசதம் மிஸ் - இந்திய அணி சிறப்பான துவக்கம்!

ODI WC 2023 1st Semi-Final | ரோகித் சர்மா அதிரடி; ஆனால் அரைசதம் மிஸ் - இந்திய அணி சிறப்பான துவக்கம்!
Updated on
1 min read

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 10 ஓவர்களில் 84 ரன்கள் குவித்தது. தற்போது 14 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதன்படி, ரோகித் - ஷுப்மன் கில் கூட்டணி ஓப்பனிங் செய்தது. நியூஸிலாந்து தரப்பில் டிரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். இதற்கு முந்தையை போட்டிகளில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சை ரோகித் சர்மா பதற்றத்துடன் எதிர்கொண்ட வரலாற்றுக்கு மாறாக, இன்றைய போட்டியில் துவம்சம் செய்தார்.

போல்ட்டின் முதல் பந்தே 2 ரன்கள் விளாசிய ரோகித், முதல் ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புல் ஷாட் சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என அதிரடி காட்டிய ரோகித் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 47 ரன்கள் குவித்தது. ரோகித்தின் அதிரடியை கட்டுப்படுத்த 6வது ஓவரே மிட்செல் சான்டனரை பந்துவீச வைத்தார் நியூஸி கேப்டன் வில்லியம்சன். லெக் ஸ்பின்னில் ரோகித் சற்று தடுமாறுவார் என்பதால் வில்லியம்சன் சான்டனரை வரவழைத்தார்.

அவற்றையும் தவிடுபொடியாக்கும் விதமாக, ஸ்பின்னில் சிறப்பாக செயல்பட்ட ரோகித், தொடர்ந்து இரண்டு பந்துகளில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து சான்டனரை ஒருகை பார்த்தார் ரோகித். முன்னதாக, 4வது ஓவரை வீசிய டிம் சவுதி ஓவரிலும் இதேபோல் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து அதிரடி தொடக்கம் கொடுத்தார். விரைவாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9வது ஓவரில் டிம் சவுதியின் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு விக்கெட்டானார். இதையடுத்து, விராட் கோலி களம்புகுந்துள்ளார். இந்திய அணி 10 ஓவர்களுக்கு 84 ரன்கள் குவித்தது.

ரோகித் சென்ற பின் ஷுப்மன் கில் மட்டையை சுழற்றினார். இதனால், 12.2 ஓவர்களில் ஷுப்மன் கில் சிக்ஸர் அடிக்க இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இதற்கு அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கில்லின் 13வது ஒருநாள் அரைசதம் இதுவாகும். 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in