“இலங்கை கிரிக்கெட்டை சீரழிப்பதே ஜெய் ஷா தான்” - அர்ஜுன ரணதுங்கா பரபரப்பு குற்றச்சாட்டு

“இலங்கை கிரிக்கெட்டை சீரழிப்பதே ஜெய் ஷா தான்” - அர்ஜுன ரணதுங்கா பரபரப்பு குற்றச்சாட்டு
Updated on
1 min read

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவது ஜெய் ஷா என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி மோசமான தோல்வியை தழுவி வெளியேறியது. விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்களுக்கு சுருண்ட இலங்கை, 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின்பு கடுமையான விமர்சனங்களை தாண்டி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பிரச்சினைகள் வெடித்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. அணியின் நிர்வாக பணிகளை கவனிக்க இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் ஏழு பேர் அடங்கிய இடைக்கால குழு ஒன்றையும் அரசு நியமித்தது. இந்த அறிவிப்பை அந்த நாட்டின் விளையாட்டு துறை முறைப்படி வெளியிட்டது.

இந்தச் சூழலில் இலங்கை அணியை இடைநீக்கம் செய்துள்ளது ஐசிசி. “ஐசிசி-யின் முழு நேர உறுப்பினரான இலங்கை கிரிக்கெட் வாரியம் விதிகளை மீறி இயங்குவதாக தெரிகிறது. அதனால் கிரகிக்க வாரியத்தை இடைநீக்கம் செய்துள்ளோம். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதை தீர்மானித்தோம். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் விவகாரங்கள் தன்னாட்சி முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும், அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது” என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே தற்போது புதிய பரபரப்பை கிளப்பி இருக்கிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா தொடர்பாக அர்ஜுன ரணதுங்கா குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதில், "இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் ஜெய் ஷா இடையிலான தொடர்பு காரணமாக, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நசுக்கி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் அவர்கள் (பிசிசிஐ) உள்ளனர்.

ஜெய் ஷாவே இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார். ஜெய் ஷாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை கிரிகெட் அழிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு மனிதர் இலங்கை கிரிக்கெட்டை சீரழிக்கிறார். அவரின் தந்தை அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால், ஜெய் ஷா சக்தி வாய்ந்த நபராக உள்ளார்" என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in