

பெங்களூரு: நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றபோது நடத்தப்பட்ட சடங்குகள் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது. ரச்சின் ரவீந்திராவுக்கு இந்தியாதான் பூர்விகம். அவரின் தாய் - தந்தை நியூஸிலாந்துக்கு இடம்பெயர்ந்ததை தொடர்ந்து அங்கு வசித்து வருகிறார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் திராவிட் ஆகியோரின் பெயரை சூட்டும் வகையில் இவருக்கு ரச்சின் ரவீந்திரா எனப் பெயர் வைத்துள்ளார் அவரின் தந்தை. சச்சின் மற்றும் திராவிட் போல் வரவேண்டும் என இப்பெயர் சூட்டியதுடன் கிரிக்கெட் பயிற்சியும் மகனுக்கு அளித்தார். அதற்கேற்ப கிரிக்கெட் விளையாட்டில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்காக பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் ரச்சின்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்காக முதல்முறையாக பங்கேற்றுள்ள 23 வயதான ரச்சின் ரவீந்திரா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 565 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் அவரின் 3 சதங்களும், 2 அரைசதங்களும் அடக்கம். இதன்மூலம் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 25 வயதுக்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை ரச்சின் முறியடித்துள்ளார். 1996 உலகக் கோப்பையில் சச்சின் எடுத்து 523 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ரச்சின், 2023 அக்டோபர் மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்றைய இலங்கை ஆட்டத்துக்கு பிறகு பெங்களூருவில் உள்ள தனது தாத்தா - பாட்டி வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார் ரச்சின். அப்போது, தனது பாட்டி சுத்திப் போட்டு திருஷ்டி கழிக்கும் காட்சிகளை வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரச்சின், "இதுபோன்ற அற்புதமான குடும்பத்தைப் பெற்றது எனது பாக்கியம். தாத்தா, பாட்டிகள் நமது தேவதைகள். அவர்களின் நினைவுகளும் ஆசிர்வாதங்களும் என்றென்றும் நம்முடன் இருக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரச்சினின் இந்தப் பதிவு தற்போது வைரலாகிவருகிறது.
முன்னதாக, இலங்கை எதிரான நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய ரச்சின், பேட்டிங்கிலும் ஜொலித்து 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். பெங்களூருவில் இந்த ஆட்டம் குறித்து பேசிய அவர், "பெங்களூருவில் எனக்கு நிறைய ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சி. மைதானத்தில் ரசிகர்கள் எனது பெயரை உச்சரித்து உற்சாகத்தை ஏற்படுத்தினர். இது சிறுவயது முதல் நான் கண்ட கனவு. எனது டீன் ஏஜ் வயதில் பெங்களூருவுக்கு வந்துள்ளேன்" என பெங்களூரு நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.