Published : 15 Jan 2018 09:51 AM
Last Updated : 15 Jan 2018 09:51 AM

போராடும் விராட் கோலி 85 பேட்டிங்: இந்திய அணி 5 விக். இழப்புக்கு 183 ரன்கள்

செஞ்சூரியனில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் தெ.ஆ அணியை 335 ரன்கள் எடுக்கவிட்ட பிறகு இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட முடிவில் கேப்டன் விராட் கோலி 85 ரன்களுடனும் ஹர்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 5 பந்து வீச்சாளர்களைக் கொண்ட தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சு இந்திய அணியை நெருக்கியது, ரன்களை சுதந்திரமாக எடுக்க முடியவில்லை. பக்கவாட்டு ஸ்விங் அதிகம் இல்லாததால் அவர்கள் கட்டுக்கோப்புடன் வீசினர், பக்கவாட்டு ஸ்விங் அதிகம் இல்லாததால் கோலிக்கு தொட்டதெல்லாம் துலங்கியது, அப்படியும் ஓரிரு இன்ஸ்விங்கரில் கால்காப்பில் வாங்கி கடும் முறையீட்டுக்கு ஆளானார்.

ஸ்விங் இல்லையெனில் தாதா என்கிற பாணி ஆட்டம், காலைப் போட்டு எக்ஸ்ட்ரா கவர், நேர், மிட் ஆப் என்று ஆடினார். இவ்வகையான பிட்ச்களில் இவர் பெரிய பேட்ஸ்மென், கேப்டவுன் போன்ற பிட்ச்களில் இவரது ஈகோ இவரைக் காலி செய்து விடும், இவர் எந்த காலத்திலும் சேவாகவோ, சச்சினாகவோ, கவாஸ்கராகவோ ஆக முடியாது. எனவே கோலி என்ற பிராண்ட் இமேஜ் நீடிக்க இது போன்ற பக்கவாட்டு ஸ்விங் ஆகாத பிட்ச்கள் வேண்டும் என்றே அவர் பிரார்த்திப்பார். மற்றபடி பவுன்ஸ் ஆகும் பந்துகளை ஆடி விடுவார். இதுதான் இவருக்கும் இப்போதைய இந்திய அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மென்களுக்கும் வித்தியாசம். ரஹானே இவரை விடவும் ஸ்விங் ஆட்டக்களங்களில் சற்றே சிறந்த பேட்ஸ்மென் தான். இல்லையெனில் லார்ட்ஸில் அந்த பசுந்தரை முதல் நாள் ஆடுகளத்தில் சதம் (116) எடுத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் நேற்று கோலியின்இரண்டு நேர் பஞ்ச் ஷாட்கள் அபாரம், ராஜகவர் டிரைவ்களும் உண்டு. இவ்வகை பிட்ச்களில் குட்லெந்த் பந்துகளை இவர் ரன்களாக மாற்றுவதில் வல்லவர். ஆனால் சேவாக் போலவோ, சச்சின் போலவோ எதிரணி பவுலர்களின் துல்லியம், லைன் மற்றும் லெந்த்களை மாற்ற வைக்கும் பேட்டிங் அல்ல. இதே பிட்ச்களில் குட் லெந்துக்கு சற்றே குறைவாக வீசப்படும் பந்துகளில் இவரால் ரன்கள் அடிக்க முடியவில்லை. சூழலுக்கு எதிராக போராடி வெற்றி பெறுபவர் அல்ல, சாதகமான சூழலை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதில் சிறந்தவர் கோலி. நம்மூராக இருந்திருந்தால் 130 பந்துகளில் 110 ரன்களை எடுத்திருப்பார், இங்கு 85 ரன்களையே எடுக்க முடிந்துள்ளது, நல்ல விஷயம் என்னவெனில் தன் விக்கெட்டை விலைமதிப்பற்றதாக அவர் தனக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் மாற்றியுள்ளார், இது பாராட்டத்தக்க ஒரு அம்சம்.

முன்னதாக கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார், அப்போது அவர் கஷ்டத்தை மோர்கெல் முடித்து வைத்தார். லெந்த் பந்து உள்ளே வர முன்னே வராமல் கிரீசிலிருந்த படியே அழுத்தி ஆடினார், நேராக மோர்கெல் கையில் உட்கார்ந்தது, ஸ்பிரிங் ஆக்சன் போல் இருந்தது இந்த அவுட். மோர்கெல் ஏதோ எதிர்த்தாற்போல் சுவரில் பந்தை அடித்து பிடித்தது போல் ராகுல் மட்டையில் போட்டு அவரே கேட்சாக இழுத்ததுபோல் தெரிந்தது.

புஜாரா இறங்கியவுடனேயே மிட் ஆனில் தட்டி விட்டு இல்லாத சிங்கிளுக்கு உயிரை வெறுத்து ஓடினார், ஆனால் நிகிடி சுறுசுறுப்பாக பீல்ட் செய்து ரன்னர் முனையில் ஸ்டம்பை பதம் பார்க்க புஜாரா நன்றாகவே பின் தங்கியிருந்தார். 28/2 என்ற நிலையிலிருந்து கோலியும், விஜய்யும் அபாரமாக ஆடினர். முரளி விஜய் 126 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து கட்டிப்போடப்பட்டதனால், மஹாராஜ் வந்தவுடன் அவரது கட் ஆட முடியாத பந்துகளையும் கட் ஆட முயன்று தோல்வி அடைந்து கொண்டிருந்தார், அப்படிப்பட்ட பந்து ஒன்றில்தான் எட்ஜ் ஆக டிகாக் கேட்ச் பிடித்தார். 79 ரன்களை இருவரும் சேர்த்தனர். கோலி கடும் ஏமாற்றமடைந்தார். ஏனெனில் அவருக்குத் தெரியும் இவர்கள் இருவரும் நின்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும் என்பது. 107/3 என்ற நிலையில் கோலி நினைத்தது போல் ரபாடா ஆட்டிப்படைக்கத் தொடங்கினார். கோலியே அபாரமான எகிறு பந்தில் எட்ஜ் ஆகாமல் தப்பினார்.

தொடர்ந்து அவர் அவுட் ஸ்விங்கர்களாக வீசி ரோஹித் ஷர்மா, கோலியின் ரன் வாய்ப்புகளை கடுமையாகக் குறைத்தார். ரோஹித் சுமார் 20 பந்துகளுக்கு தன் முதல் ரன்னை எடுக்காமல் தவித்தார். எதிர்பார்த்தது போலவே அதே லெந்தில் இரண்டு பந்துகளை ரபாடா உள்ளே கொண்டு வர இருமுறையும் கோலிக்கு எதிராக கடும் எல்.பி.முறையீடு எழுந்தது. தென் ஆப்பிரிக்கா ரிவியூ ஒன்றை இழந்தது. ஆனால் இதே ஸ்பெல்லில் இதே இன்ஸ்விங்கரில் ரோஹித் ஷர்மா தாங்கவில்லை, எல்.பி.ஆனார். 42 டெஸ்ட் இன்னிங்ஸில் 7-வது முறையாக எல்.பி. ஆனார் ரோஹித் சர்மா என்கிறது புள்ளி விவரங்கள். 10 ரன்களில் ரோஹித் வெளியேற இந்தியா 132/4. ரஹானே நிச்சயம் காண்டாகியிருப்பார். பார்த்திவ் படேல் தனது 19 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார், அதில் 3 பவுண்டரிகள் அடித்திருந்தார். ஆனால் நிகிடி பந்து ஒன்று அவரது எட்ஜைப் பதம்பார்த்து கேட்ச் ஆனது. 164/5 என்ற நிலையிலிருந்து 183/5 என்று மேலும் சேதமில்லாமல் முடிந்தது. ரன் விகிதம் ஓவருக்கு 3தான் எனும்போது இன்று இன்னமும் 30 ஓவர்கள் ஆடினாலும் 80 ரன்கள்தான் வருவதற்குச் சாத்தியம், 263-70 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. இதையும் மீறி பாண்டியாவும் கோலியும் ஏதாவது அதிசயங்கள் நிகழ்த்தினால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா ஸ்கோரைக் கடக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x