Published : 25 Jan 2018 02:38 PM
Last Updated : 25 Jan 2018 02:38 PM

வாண்டரர்ஸ் பிட்ச் பேட்ஸ்மென்களுக்கு இழைக்கப்படும் அநீதி: கங்குலி கருத்து

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பேட்ஸ்மென்களுக்கான அநீதி என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா 187 ரன்களுக்குச் சுருண்டது. இதில் கோலி, புஜாரா அரைசதங்களுடன் 104 ரன்களையும் புவனேஷ்வர் குமார் 30 ரன்களையும் உதிரிகள் வகையில் 26 ரன்களையும் சேர்த்து 160 ரன்கள் வந்தது, மற்றவர்கள் சேர்ந்து 27 ரன்களையே எடுத்தனர். அதுவும் கோலிக்கு 11 மற்றும் 32 ரன்களில் தென் ஆப்பிரிக்கா கேட்ச் விட்டதாலும் புஜாரா 0-வில் இருந்த போது ஒரு பிளம்ப் எல்.பியை அம்பயர்ஸ் கால் என்று ரிவியூ செய்யாமல் விட்டதாலும் இந்த ரன் எண்ணிக்கை வந்தது. இல்லையெனில் இது 100 ரன் பிட்ச்தான். டேல் ஸ்டெய்ன் இருந்திருந்தால் இந்திய அணி பெரும் பிரச்சினைகளைச் சந்தித்திருக்கும்.

பிட்சில் வேகம், பவுன்ஸ், ஸ்விங் என்று பேட்டிங்குக்குக் கடும் சவால் அளித்து வருகிறது. பிலாண்டர் ஏறக்குறைய விளையாட முடியாத பவுலராகத் திகழ்ந்து 8 ஓவர்களில் 7 மெய்டன்கள் 1 ரன் 1 விக்கெட் என்று தென் ஆப்பிரிக்காவின் முதல் 8 ஓவர்கள் சிக்கன வீச்சுக்கான சாதனையை நிகழ்த்தினார்.

இந்நிலையில் கங்குலி ட்விட்டர் பதிவில், “இந்தப் பிட்சில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது அநீதியாகும். 2003-ல் நியூஸிலாந்தில் இதே போன்ற பிட்ச்களை எதிர்கொண்டோம். இத்தகைய பிட்ச்களில் பேட்ஸ்மென்களுக்கு வாய்ப்பு குறைவு. ஐசிசி இதனைக் கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு கங்குலிக்கு கடும் விமர்சன பதில்களும் வந்துள்ளன, தங்கள் பேட்ஸ்மென்களுக்கும் பவுலர்களுக்கும் சாதகமாக தூசி தும்பட்டை, குழி பிட்ச்களைப் போட்ட போது ஏன் இத்தகைய அக்கறைகள் கங்குலிக்கு எழவில்லை என்று பதில்கள் கிளம்பியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x