

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இடது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 82 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார் கேப்டன் ஷகிப் அல் ஹசன்.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது ஷகிப் அல் ஹசனுக்கு இடது ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரில் இருந்து அவர், விலகி உள்ளார். வங்கதேச அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் ஷகிப் அல் ஹசன் களமிறங்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் அனாமுல் ஹக் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.