Published : 24 Jan 2018 09:58 AM
Last Updated : 24 Jan 2018 09:58 AM

செய்தித்துளிகள்: இந்திய அணியின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வோம் - பிசிசிஐ

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணியின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வோம் என பிசிசிஐ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் 4 நாடுகள் ஹாக்கித் தொடரின் 2-வது கட்ட ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.

சென்னையில் நடைபெற்று வரும் 68-வது தேசிய கூடைப்பந்து போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ரயில்வே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி அரை இறுதியில் 76-63 என்ற புள்ளிகள் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

சென்னையில் நடைபெற்று வரும் மெக்பெரன் கோப்பைக்கான தேசிய கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு - சென்னையின் எப்சி பி அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் தகுதி சுற்று ஆட்டங்களுடன் நேற்று தொடங்கியது. இதற்கிடையே இந்தத் தொடரில் இருந்துமுன்னணி வீரர்களான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் விலகியுள்ளனர். இதனால் தகுதி சுற்றில் விளையாட இருந்த மற்றொரு இந்திய வீரரான காஷ்யப் பிரதான சுற்றுக்குள் நேரடியாக நுழைந்தார்.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று டாக்காவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 76, ஷகிப் அல் ஹசன் 51 ரன்கள் சேர்த்தனர். 217 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 36.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய மகளிர் அணியினரை சந்தித்து சச்சின் டெண்டுல்கர் உரையாடினார். இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x