

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கன் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்த வெற்றிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இடையே அமைந்த கூட்டணி தான் பிரதான காரணம்.
இருவரும் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் மேக்ஸ்வெல்லின் பங்கு 179 ரன்கள். கம்மின்ஸின் பங்கு வெறும் 12 ரன்கள். இதற்காக அவர் 68 பந்துகளை எதிர்கொண்டு இருந்தார். களத்தில் 122 நிமிடங்கள் பேட் செய்திருந்தார். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் (2-ம் இடம்) அவரது இந்த நிதான இன்னிங்ஸும் இடம் பெற்றுள்ளது.
அவர் பவுலராக இருந்தாலும் பேட்டிங்கில் டீசன்ட்டான ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டுள்ளவர். கடந்த 2022 ஐபிஎல் சீசனில் 15 பந்துகளில் 56 ரன்களை கம்மின்ஸ் விளாசி இருந்தார். சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு அரை சதம் பதிவு செய்துள்ளார். அணியின் தேவைக்கு ஏற்ப பேட்டிங்கில் பங்களிப்பு வழங்குபவர்.
தனக்கு எதிரே பேட் செய்து கொண்டிருந்த மேக்ஸ்வெல், அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் மிரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், கம்மின்ஸ் நிதானமாகவே ஆடிக் கொண்டிருந்தார். ரஷித், முஜீப், நூர் அகமது, நபி என ஆப்கன் அணியின் சுழல் கூட்டணி பந்து வீச்சை எதிர்கொண்டு ஆடி இருந்தார். மேக்ஸ்வெல்லுக்கு ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனாலும் அதை சமாளித்து நேர்த்தியாக பேட் செய்திருந்தார். ‘நான் ரன் குவிக்கிறேன் பார்’ என எங்கும் அவர் அவசரம் காட்டவில்லை. அதனால் ரன் குவிக்கும் பொறுப்பை மேக்ஸ்வெல் வசமே கொடுத்திருந்தார்.
அதற்கு முக்கிய காரணம் ஸாம்பா மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் அடுத்து பேட் செய்ய வேண்டும். பெரிய ஷாட் ஆட முயன்று அது மிஸ் ஆனால் விக்கெட்டை இழக்க நேரிடும். அது அணிக்கு பின்னடைவாக அமையும் என்ற கணக்கின் அடிப்படையில் அவர் பொறுப்புடன் ஆடி இருந்தார். மேக்ஸ்வெல் ரன் குவிப்பில் ஈடுபட பக்க பலமாக, ஒரு பார்ட்னராக துணை நின்று ஆடி இருந்தார். மேக்ஸ்வெல், சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசும் போதெல்லாம் அவருக்கு ஊக்கம் கொடுத்தார்.