Published : 06 Nov 2023 07:07 AM
Last Updated : 06 Nov 2023 07:07 AM
கொல்கத்தா: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. விராட் கோலி,ஸ்ரேயஸ் ஐயரின் அபாரமான ஆட்டம், ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றி எளிதானது.
கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்குஇந்த ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது. டாஸைவென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடினர்.
சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசிய ரோஹித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ரபாடா பந்துவீச்சில், பவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து கில்லுடன், விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில், கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஷுப்மன் கில் போல்டானார்.
பின்னர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ஸ்ரேயஸ் ஐயரும் நிதானமாக விளையாடி இன்னிங்ஸை கட்டமைத்தனர். 10 ஓவர்களில் 91 ரன்கள் குவித்த இந்திய அணி, அதன் பிறகு நிதானமாக ரன்களைச் சேர்த்தது.
விராட் கோலியும், ஸ்ரேயஸ் ஐயரும் அடுத்தடுத்து அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை 200-க்கு உயர்த்தினர்.
அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரேயஸ் ஐயர், லுங்கி நிகிடி பந்துவீச்சில் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 87 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் அவர் 77 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து விளையாட வந்த கே.எல். ராகுல் 17 பந்துகளில் 8 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலியும், ரவீந்திர ஜடேஜாவும் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை விளாசினர். சிறப்பாக விளையாடி விராட் கோலி, ஒரு நாள் போட்டிகளில் தனது 49-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
அவர் 121 பந்துகளில் 101 ரன்கள் (10 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்கள் (ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி நிகிடி, மார்கோ யான்சன், ரபாடா, கேசவ் மகாராஜ், தபரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடத் தொடங்கியது.
ஆனால் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார் மொகமது சிராஜ். அவர் 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து போல்டானார். அதன் பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. ரவீந்திர ஜடேஜா, மொகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மொகமது ஷமிக்கு 2 விக்கெட்: தெம்பா பவுமா 11, ராஸி வான் டெர் டஸன்13, எய்டன் மார்க்ரம் 9, ஹெய்ன்ரிச் கிளாசன் 1,டேவிட் மில்லர் 11, மார்கோ யான்சன் 14, கேசவ் மகராஜ் 7, லுங்கி நிகிடி 0, காகிசோரபாடா 6 ரன்களில் வீழ்ந்தனர். தபரைஸ்ஷம்ஸி மட்டும் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. இதையடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை இந்திய அணி பெற்றது.
ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களைச் சாய்த்து அணியின் வெற்றியை எளிதாக்கினார். மொகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மொகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இந்திய அணி 8 ஆட்டங்களில் விளையாடி 8-லும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.
ஒரு நாள் போட்டியில் மோசமான தோல்வி: இந்தப் போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் மோசமான தோல்வியை தென் ஆப்பிரிக்க அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் பாகிஸ்தானிடம் 182 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வி கண்டிருந்தது.
சச்சின் சாதனை சமன்: கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 49-வது சதத்தை விளாசியதன் மூலம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை (ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதங்கள்) விராட் கோலி சமன் செய்தார்.
சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் விளாசியிருந்தார். ஆனால் விராட் கோலியோ அதை 277 இன்னிங்ஸ்களிலேயே எட்டியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசை யில் 2-வது இடத்தில் ரோஹித் சர்மா (31 சதங்கள்) இருக்கிறார். விராட் கோலி, இதுவரை சர்வதேச போட்டிகளில் 79 சதங்களைக் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களும், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதமும் அவர் எடுத்துள்ளார். 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அவர் 26 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் விராட் கோலி. இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் 34 ஆட்டங்களில் விளையாடி 1,573 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும் (2,278 ரன்கள்), 2-வது இடத்தில் ரிக்கி பாண்டிங்கும் (1,743 ரன்கள்)
உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT