

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் விராட் கோலி. இதன் மூலம் சர்வதேச அரங்கில் சச்சினின் சத சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இந்த சூழலில் கோலியை வாழ்த்தி உள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 49 சதங்களை விளாசிய முதல் வீரர் என அறியப்படுகிறார் சச்சின் டெண்டுல்கர். இந்த சாதனையை 451 இன்னிங்ஸ் ஆடி அவர் படைத்தார். அவரது சத சாதனையை முறியடிக்கும் திறன் படைத்த வீரராக கோலி அறியப்பட்டார். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 49-வது சதத்தை பதிவு செய்தார். மொத்தம் 277 ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஆடி சச்சினின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். “சிறப்பாக விளையாடி இருந்தீர்கள் விராட். 49-வது சதத்தில் இருந்து 50-வது சதத்தை எட்ட நான் 365 நாட்கள் எடுத்துக் கொண்டேன். ஆனால், அடுத்த சில நாட்களில் 50-வது சதத்தை நீங்கள் எட்டுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்!” என சச்சின் தெரிவித்துள்ளார்.