

லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்த சூழலில் தங்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் அது பெரிய சாதனையாக அமையும் என ஆப்கன் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தெரிவித்துள்ளார்.
லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 34-வது போட்டியில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது ஆப்கானிஸ்தான். இது இந்த தொடரில் ஆப்கன் பெற்றுள்ள நான்காவது வெற்றியாகும். இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளை ஆப்கன் வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளின் மூலம் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
“இந்தப் போட்டியில் எங்களது பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டும் சிறப்பாக அமைந்தது. மூன்றாவது முறையாக இந்த தொடரில் இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளோம். இந்த வெற்றியை அடைக்கலம் தேடி தஞ்சம் அடைந்த ஆப்கன் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
கள சூழலுக்கு ஏற்ப நாங்கள் விளையாடி வருகிறோம். ஒன்றிணைந்து விளையாடி வெற்றிகளை பெற்று வருகிறோம். அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான சிறந்த முயற்சியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அது நடந்தால் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாக அமையும். இந்நேரத்தில் அது நடந்தால் எங்கள் நாட்டுக்கு மட்டுமல்லாது எனக்கும் தனிப்பட்ட முறையில் ஆறுதலாக அமையும். மூன்று மாதங்களுக்கு முன்னர் எனது தாயை இழந்தேன். எங்கள் குடும்பம் அம்மாவின் இழப்பால் மிகுந்த வேதனையில் உள்ளது” என ஹஸ்மதுல்லா ஷாகிதி தெரிவித்தார்.