8-வது முறையாக Ballon d’Or விருதை வென்றார் மெஸ்ஸி!

மெஸ்ஸி
மெஸ்ஸி
Updated on
1 min read

பாரிஸ்: எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்துள்ளார் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி. கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணியை வழிநடத்தி உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல செய்திருந்தார். அதோடு தங்கப் பந்து விருதையும் அந்த தொடரில் அவர் வென்றிருந்தார்.

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Ballon d'Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி இருந்தது. வழக்கம் போலவே 30 வீரர்கள் இந்த விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்றிருந்தனர். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார். நடப்பு ஆண்டில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். இதில் முதலிடம் பிடித்த மெஸ்ஸி, நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றார். இதன் மூலம் 8-வது முறையாக அவர் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d’Or விருதை வென்றுள்ளார். தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் பிரிவில் Ballon d’Or விருதை அடனா பொன்மதி வென்றார். ஸ்பெயின் நாட்டுக்காக அவர் விளையாடி வருகிறார். ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது. ஹாலண்ட், Gerd Muller டிராபியை வென்றார். மார்ட்டினஸ், Yachine டிராபியை வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in