

லக்னோவில் நேற்று நடந்த உலகக் கோப்பை 2023 தொடரின் 29-வது போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி தகர்த்தது. 229 ரன்கள் இலக்கைக் கூட விரட்ட முடியாமல் ஷமி, பும்ரா, குல்தீப் பவுலிங்கில் 129 ரன்களுக்குச் சுருண்டு ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும் கடும் அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து. ஆனால், அதைவிட அதிர்ச்சி என்னவெனில், இங்கிலாந்து பயிற்சியாளர் மேத்யூ மாட் தெரிவித்ததுதான் பலரையும் நிலைகுலையச் செய்துவிட்டது.
அதாவது, இந்த உலகக் கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள்தான் பாகிஸ்தானில் 2025-ல் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற முடியும் என்பது தனக்குத் தெரியாது என்று மேத்யு மாட் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். நேற்று இந்திய அணியிடம் தோல்வி கண்ட பிறகுதான் தனக்கு இது தெரியவந்தது என மேத்யூ மாட் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உலகக் கோப்பை போட்டித் தொடர் அட்டவணையில் இப்போது இங்கிலாந்து கடைசி இடத்தில் உள்ளது. இங்கிலாந்து இப்போது தங்களுக்கு மீதி இருக்கும் 3 ஆட்டங்களில் வென்றால் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதிபெற வாய்ப்பு ஏற்படும். அப்படியே 3 ஆட்டங்களில் வெற்றிபெற்றாலும் இங்கிலாந்தின் இப்போதைய நெட் ரன் ரேட் விகிதம் அதற்கும் இடம் கொடுக்குமா என்பதுதான் இப்போதைய ஐயமே.
முன்னதாக, “எனக்கு இந்தியாவுக்கு எதிரான போட்டி முடிந்த பிறகுதான் இந்த சாம்பியன்ஸ் டிராபி தகுதி விவகாரமே தெரிவிக்கப்பட்டது. ஐசிசி விதிகளை மாற்றியுள்ளது. ஆனால் உள்ளபடியே கூற வேண்டுமென்றால் அப்படியே சாம்பியன்ஸ் டிராபி தகுதி விவகாரம் முன்கூட்டியே தெரிந்திருந்தாலும் அது இங்கிலாந்தின் ஆட்டத்தை எந்த விதத்திலும் மாற்றியிருக்காது என்றே நினைக்கிறேன். ஆகவே, இது ஒரு பெரிய விஷயமல்ல” எனக் கூறியிருந்தார் மேத்யூ மாட். இதில், தெரியாது என்று கூறியதை விட இது ஒன்றும் ‘பெரிய விஷயமல்ல’ அல்ல என்று கூறியது கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
குறிப்பாக, 2015 உலகக் கோப்பை படுதோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணியை தூக்கி நிறுத்தி 2019 உலகக் கோப்பையை வென்று கொடுத்து அணியைக் கட்டமைத்த இயான் மோர்கன் கொஞ்சம் கடுமையாகவே விமர்சனம் செய்துள்ளார். மோர்கன் பேசுகையில், “எந்த ஒரு விளையாட்டில் உள்ள எந்த ஒரு அணியும் இவ்வளவு மோசமாக ஆடி நான் பார்த்ததில்லை. அதுவும் 2019 உலக சாம்பியன்கள் என்றால் எத்தனை எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும். அத்தனையும் தவிடுபொடியாக்கிவிட்டன. அணிக்குள் ஏதோ ஒரு நிலைதடுமாற்றம், ஒற்றுமைக் குலைவு உள்ளது. ஏதோ நடக்கிறது. நிச்சயம் இதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது.” என்று அணியின் ஒற்றுமையையே கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
ஆனால், பயிற்சியாளர் மேத்யூ மாட், இயான் மோர்கனின் இத்தகைய விமர்சனத்தையும் மறுத்துள்ளார். “ஏதோ நடக்கிறது என்பதெல்லாம் இல்லை. ஆட்டத்தின் முடிவுகள் தோல்விகளாக இருந்தாலும் இங்கிலாந்து அணி ஒரு இறுக்கமாக பிணைக்கப்பட்ட வீரர்க்ள் கொண்ட அணியாகவே உள்ளது” என்று மேத்யூ மாட் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.