பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதி: வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு

வாசிம் அக்ரம் | கோப்புப்படம்
வாசிம் அக்ரம் | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதி சரியில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுடனான ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.

குறிப்பாக நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் மிக மோசமான தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது. இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இன்று மிகப் பெரிய அவமானம் நடந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 274 ரன்கள் என்ற இலக்கை வெறும் 2 விக்கெட்களை மட்டும் இழந்து ஆப்கானிஸ்தான் எட்டுவது என்பது மிகப் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. ஆடுகளத்தை குறை கூறுவதை விட்டுவிட்டு பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங்கை பார்க்கவேண்டும். அவர்களின் உடற்தகுதியை பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளாக உடற்தகுதி சோதனையிலேயே பங்கேற்கவில்லை. இந்த விஷயத்தை நாங்கள் 3 வாரங்களாக பேசிக் கொண்டு இருக்கிறோம். மோசமான உடற்தகுதி உள்ள வீரர்களின் பெயர்களை நான் தனித்தனியாக கூறினால் அவர்கள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய மோசமான நிலை வரும்.

பாகிஸ்தான் வீரர்கள் தினமும் 8 கிலோ ஆட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள் போல தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தக் கூடாதா?

நாட்டுக்காக விளையாடும்போது நீங்கள் சிறந்த விஷயத்தை வெளிப்படுத்த வேண்டும். பீல்டிங் மோசமாக இருந்தால் தோல்வியைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே, பாகிஸ்தான் வீரர்கள் நல்ல உடற்தகுதியுடன் மைதானத்தில் களமிறங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in