ODI WC 2023 | ஆப்கான் வெற்றியில் அஜய் ஜடேஜாவின் செல்வாக்கு உள்ளது- சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

சச்சின் டெண்டுல்கர் | கோப்புப் படம்
சச்சின் டெண்டுல்கர் | கோப்புப் படம்
Updated on
1 min read

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆப்கானிஸ்தானின் பாகிஸ்தானுக்கு எதிரான அபார வெற்றியை X-தளத்தில் பாராட்டியுள்ளார். ஆப்கானின் வரலாற்று வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் அஜய் ஜடேஜாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அஜய் ஜடேஜா என்றாலே 1996 உலகக்கோப்பை பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியில் இறங்கி அடித்த அடிதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வக்கார் யூனிஸை ஒரு ஓவரில் போட்டு சாத்து சாத்தென்று சாத்தி அலற விட்டு 25 பந்துகளில் 45 ரன்களை 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்தார். இந்த அதிரடிப் பங்களிப்பு அன்று இந்திய வெற்றியைத்தீர்மானித்தது என்றால் மிகையாகாது.

ஏனெனில் சயீத் அன்வரும், ஆமிர் சொஹைலும் 10 ஓவர்களில் சேசிங்கின் போது 84 ரன்கள் என்று அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதன் பிறகு ஆமிர் சொஹைல் தேவையில்லாமல் வெங்கடேஷ் பிரசாத்தைச் சீண்டினார். சாது மிரண்டால் என்ன ஆகும் என்பதற்கு அன்று பிரசாத்தின் பவுலிங் ஒரு சாட்சி. இவர் 3 விக்கெட்டுகளையும் கும்ப்ளே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த பாகிஸ்தான் 248 ரன்களுக்கு மடிந்தது. அஜய் ஜடேஜா அன்று பவுலிங்கும் செய்து 5 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்து சிக்கனம் காட்டினார்.

இந்நிலையில் ஆப்கான் அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக அஜய் ஜடேஜா இந்த உலகக்கோப்பைக்கு சற்று முன்னர் தான் நியமிக்கப்பட்டார். ஜடேஜா தான் ஆடிய காலக்கட்டத்தில் ஒரு சிறந்த பீல்டர், பயனுள்ள மிடில் ஓவர் பவுலர். கடைசியில் இறங்கி ஆடும் நல்ல பேட்டர். கொஞ்சம் கேப்டன்சி திறமைகளும் உண்டு.

அஜய் ஜடேஜாவின் தாக்கம் ஆப்கான் அணியின் பீல்டிங்கிலும் பேட்டர்கள் ரன்னுக்காக வேகமாக ஓடுவதிலும் தெரிகிறது என்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

அவர் தன் X பக்கத்தில், “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளது. பேட்டிங்கில் அவர்களின் கட்டுக்கோப்பு, , அவர்கள் வெளிப்படுத்திய நிதானம் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே ஆக்ரோஷமாக ஓடுவது அவர்களின் கடின உழைப்பை பிரதிபலிக்கிறது. இது அஜய் ஜடேஜாவின் செல்வாக்கின் காரணமாக இருக்கலாம்.” என்று ஜடேஜாவின் தாக்கத்தை புகழ்ந்துள்ளார் சச்சின்.

ஒரு வலிமையான பந்துவீச்சு வரிசையுடன், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிரான ஆப்கானின் வெற்றிகள் ஒரு புதிய ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சியை அறிவுறுத்துகின்றது.

ஆப்கானிஸ்தான் அணி களத்தில் காட்டும் உற்சாகம், ஆக்ரோஷம், அதே வேளையில் விவேகமான நடத்தை ஆகியவையும் அவர்கள் முகத்தின் புன்சிரிப்பும் ஜடேஜா களத்தில் காட்டிய அதே பாணியை ஒத்திருக்கிறது என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in