ODI WC 2023 | நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை! 

ODI WC 2023 | நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை! 

Published on

லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நெதர்லாந்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல் பிரெக்ட் 70 ரன்களையும், வான் பீக் 59 ரன்களையும் சேர்த்து அணிக்கு பலமாக திகழ்ந்தனர். இலங்கை தரப்பில் தில்ஷான் மதுஷங்க, ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், எம்.தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு பத்தும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா அணி தொடக்கம் கொடுத்தது. இதில் குசல் பெரேரா 5 ரன்களில் கிளம்பினார். அவரைத் தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸூம் பெரிய அளவில் சோபிக்காமல் 11 ரன்களில் அவுட்டானார். 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 60 ரன்களை சேர்த்திருந்தது.

பத்தும் நிஸ்ஸங்கா 54 ரன்களையும், சரித் அசலங்கா 44 ரன்களையும் சேர்த்துவிட்டு கிளம்பினர். நெதர்லாந்துக்கு எதிராக பாட்னர்ஷிப் அமைத்த சதீர சமரவிக்ரம மற்றும் தனஞ்சய டி சில்வா இணைந்து விளாச அணியின் ஸ்கோர் ஏறியது. தனஞ்சய டி சில்வா 30 ரன்களில் ஆக, அவருக்கு அடுத்து வந்த துஷான் ஹேமந்த ஃபோர் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தார். இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை. சதீர சமரவிக்ரமா 91 ரன்களிலும், துஷான் 4 ரன்களிலும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

நெதர்லாந்து அணி தரப்பில் ஆர்யன் டட் 3 விக்கெட்டுகளையும், கொலின் அக்கர்மேன், பால் வான் மீகெரென் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in