ரூ.1.60 லட்சம் நிதி இல்லாமல் சர்வதேச போட்டியை தவறவிட்ட பாரா நீச்சல் வீரர்: தமிழக அரசின் உதவியை எதிர்நோக்குகிறார்

மகேஷ்
மகேஷ்
Updated on
2 min read

சென்னை: ரூ.1.60 லட்சம் நிதி இல்லாமல் சர்வதேச போட்டியை தவறவிட்டுள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாரா நீச்சல் வீரரான மகேஷ். வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவர், தமிழக அரசின் உதவியை எதிர்நோக்கி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். பிறவியிலேயே இரு கைகளின் வளர்ச்சி குன்றியவர். இவரது தாய் புவலஷ்மி, தந்தைமஞ்சுநாதன். குழந்தை பருவத்திலேயே மகேஷ், தாயை இழந்துவிட்டார். தந்தையும் இவரை விட்டுபிரிந்து சென்றுள்ளார். இதன் பின்னர்பாட்டி பார்வதி அம்மாள் அரவணைப்பில் மகேஷ் வளர்ந்துள்ளார். காய்கறி வியாபாரம் செய்து, மகேஷை 12-ம் வகுப்பு வரை பார்வதி அம்மாள் படிக்க வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நேரு நினைவுசம்பூரணி அம்மாள் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மகேஷ் அதன் பின்னர் ஸ்பான்சர் உதவியுடன் சேலத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் (சிஏ) முடித்துள்ளார். இதற்கிடையே மகேஷுக்கு ஆதரவாக இருந்த பார்வதி அம்மாள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதன் பின்னர் நண்பர்கள் உதவியுடன் சென்னையில் தங்கியிருந்தபடி பிரசிடென்சி கல்லூரியில் எம்.காம் படிப்பை நிறைவு செய்தார் மகேஷ்.

படிப்பின் ஊடாக விளையாட்டின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த மகேஷ்பாரா நீச்சல் போட்டிகளில் கவனம்செலுத்தி உள்ளார். கடந்த 2021-ம்ஆண்டு கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா நீச்சல்போட்டியில் 50 மீட்டர் பேக் ஸ்டிரோக்கில் வெள்ளிப் பதக்கமும், 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில்வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை ஸ்டிரோக்கில் வெள்ளி பதக்கம் கைப்பற்றினார்.

கடந்த ஆண்டு வேளச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 50 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் வெள்ளி பதக்கமும், 100 மீட்டர் பட்டர்பிளை ஸ்டிரோக்கில் தங்கப் பதக்கமும் வென்றார். இதன்பின்னர் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை ஸ்டிரோக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

இதன் பின்னர் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பட்டர்பிளை ஸ்டிரோக்கில் தங்கப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்று குவித்துள்ள மகேஷ் தனது பாட்டியின் மறைவுக்கு பின்னர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

எனினும் அவரிடம் திறமை வற்றவில்லை. படிப்பை முடித்துவிட்ட நிலையில் முன் போன்று அதிகளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு ஸ்பான்சர்கள் இல்லாமலும், உணவு உள்ளிட்ட அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க தாய்லாந்தில் நடைபெற உள்ள பாரா விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நிதி இல்லாமல் தவறவிட்டுள்ளார் மகேஷ்.

இதுதொடர்பாக மகேஷ் கூறும்போது, “தாய்லாந்தில் ஐ வாஷ் பாரா விளையாட்டு போட்டிகள் வரும்டிசம்பர் 1 முதல் 9-ம் தேதி வரைநடைபெற உள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக உதவி கோரி தமிழகஅரசை இரு முறை அணுகினேன். விளையாட்டுத்துறை அமைச்சரும் உதவி செய்வதாக கூறியிருந்தார்.

ஆனால் தாய்லாந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வீரர்கள் தேர்வு குறித்து முறையான தகவல் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. திடீரென போட்டியில் கலந்துகொள்வது தொடர்பாக இந்திய பாராலிம்பிக் கமிட்டியிடம்இருந்து கடந்த 14-ம் தேதி எனக்கு இ-மெயில் வந்தது. அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த ரூ.1.60 லட்சம் தொகையை இரு தினங்களுக்குள் (16-ம் தேதிக்குள்) செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு நாட்களுக்குள் என்னால் அவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியவில்லை. மேலும் யாரைஅணுகுவது என்றும் தெரியவில்லை.இதனால் தாய்லாந்து போட்டியைதவறவிட்டுள்ளேன். அந்த போட்டியில் எஸ் 6-ல் நடைபெற உள்ளநீச்சல் போட்டியில் 3 பிரிவுகளில்பங்கேற்க இருந்தேன். இனிமேல் அடுத்து நடைபெற உள்ள தேசியஅளவிலான போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அரசு தரப்பில் எனக்கு ஏதேனும் உதவிகள் கிடைத்தால் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கும், நம் மாநிலத்துக்கும் பெருமை சேர்ப்பேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in