

புதுடெல்லி: சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்டங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக ‘திங் சேஞ்ச் பாரம்’ (டிசிஎப்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சூடுபிடித்து வரும் நிலையில், சட்டவிரோதமான சூதாட்டங்களும் வேகமெடுத்துள்ளன. சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சட்டவிரோதமான விளையாட்டு பந்தய மற்றும் சூதாட்ட சந்தைக்கு இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.8,20,000 கோடி வருமானம் கிடைக்கிறது. இது, அமெரிக்க மதிப்பில் 100 பில்லியன் டாலராகும்.
தற்போதைய நிலையில் பந்தய விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அந்த வகையில் சட்டப்பூர்வமான வகையில் இந்த தொகை பந்தயங்களில் கட்டப்பட்டிருந்தால் ஆண்டுக்கு ரூ.2,29,600 கோடி வரி வருவாய் அரசுக்கு கிடைத்திருக்கும். ஆனால், தற்போது சட்டவிரோதமான வகையில் சூதாட்டங்கள் நடைபெறுவதால் அரசுக்கு ரூ.2.29 லட்சம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளை கண்காணித்து கட்டுப்படுத்த சிறப்பு பணிக்குழுவை உருவாக்க வேண்டும். அத்துடன் வெளிநாட்டு பந்தய நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு டிசிஎப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ