

புனே: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக தனது சொந்த காரில் புனே சென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மணிக்கு 215 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்த்து புனேயில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க (எம்சிஏ) மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தனது சொந்த காரில் புனே சென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மணிக்கு 215 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் போட்டிக்குப் பின் மும்பையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற ரோகித் அங்கிருந்து புனே மைதானத்துக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. அணி வீரர்களுடன் பயணிக்காமல் தனிப்பட்ட முறையில் தனது ஆடம்பர லம்போர்கினி காரில் புனேவுக்கு பயணித்துள்ளார்.
மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் பயணித்தபோது தான் அதிவேகமாக காரை ஓட்டியதாக ரோகித் மீது புனே நகர போக்குவரத்து காவல் துறை குற்றம் சுமத்தியுளளது. அதிவேகமாக காரை ஓட்டியதற்காக அவருக்கு மூன்று அபராத ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் புனே போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலையில் மணிக்கு 200 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் மணிக்கு 215 கிமீ வேகத்திலும் தனது ஆடம்பர காரை ரோகித் ஓட்டிச் சென்றார் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்ததாக புனே மிரர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் இதேபோல் வேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளான நிலையில் ரோகித்தின் இந்த செயல் கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 264 ரன்கள் அடித்துள்ளதை குறிக்கும் விதமாக 264 பதிவெண் கொண்ட ஆடம்பர லம்போர்கினி காரை ரோஹித் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.