Published : 11 Jan 2018 10:34 AM
Last Updated : 11 Jan 2018 10:34 AM

ஹீரோ ஐ லீக் 2017 தேசிய கால்பந்து: சென்னை சிட்டி - மணிப்பூர் நெரோகா ஆட்டம் டிரா

கோவையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் (சிசி எஃப்.சி.) அணி, மணிப்பூர் நெரோகா அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில், 'ஹீரோ ஐ லீக் 2017' கால்பந்து தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணியான 'சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப் அணியில்' சர்வதேச அளவிலான கால்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தப் போட்டிக்காக கோவை நேரு விளையாட்டு அரங்கத்தை சுமார் ரூ.4 கோடி செலவில் புதுப்பொலிவுபடுத்தியுள்ளது சென்னை சிட்டி ஃபுட்பால் கிளப்.

இந்தத் தொடரில் சென்னை ஃபுட்பால் கிளப் அணி 18 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற 8 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா, 4 தோல்விகளை பதிவு செய்திருந்தது சென்னை ஃபுட்பால் கிளப் அணி. இந்த நிலையில் சென்னை ஃபுட்பால் கிளப் அணி தனது 9-வது ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, மணிப்பூர் நெரோகா அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான மோகன்பகான் அணியை வென்றதால், சிசி எஃப்.சி. அணி மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இதற்கேற்றாற்போல தொடக்கத்திலிருந்தே சிசி எஃப்.சி. அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். எனினும், நெரோகா அணி வீரர்களும் சாதுர்யமாக விளையாடி, சி.சி.எஃப்.சி. அணியினர் கோல் போட முடியாதவாறு தடுத்தனர்.

முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படாததால், இரண்டாவது பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தீவிரம் காட்டின. சிசி எஃப்.சி. அணியினர் கோல் போடுவதற்கு பெரிதும் முயற்சி எடுத்தும் பலனில்லை.

கூடுதலாக 4 நிமிடங்கள் ஒதுக்கியபோதும், இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட சிசி.எஃப்.சி. அணி வீரர் சூசைராஜுக்கு, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா ஆகியோர் பரிசு வழங்கினர்.

இதுகுறித்து சி.சி.எஃப்.சி. அணியின் உரிமையாளரும், 'தி இந்து' குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவருமான ரோஹித் ரமேஷ், இணை உரிமையாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறும்போது, “இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் பெரும்பாலானவை வெளி மாநிலங்களில் நடைபெற்றன.

இனி நடைபெற உள்ள 9 ஆட்டங்களில், 6 ஆட்டங்கள் கோவையில் நடைபெறும். உள்ளூர் களம், ரசிகர்களின் ஆதரவு ஆகியவை சிசி.எஃப்.சி. அணிக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். எனவே, இனி வரும் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியைப் பெறும் முனைப்புடன் வீரர்கள் விளையாடுவார்கள்” என்றனர்.

சிசி எஃப்.சி. அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி கோகுலம் கேரளா ஃபுட்பால் கிளப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டமும் கோவை நேரு விளையாட்டு அரங்கிலேயே நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x