“இந்த விருது பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கானது” - ஆட்ட நாயகன் முஜீப்!

முஜீப் மற்றும் ரஷித் கான்
முஜீப் மற்றும் ரஷித் கான்
Updated on
1 min read

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் பெற்ற ஆட்ட நாயகன் விருதை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார் ஆப்கன் கிரிக்கெட் அணியின் வீரர் முஜீப் உர் ரஹ்மான்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கன் அணி. உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி இது. இந்தப் போட்டியில் 285 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.

“உலக சாம்பியனை வீழ்த்தியது மகத்தான தருணம். இது எங்கள் அணி படைத்துள்ள பெரிய சாதனை. இந்த நாளுக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். பேட்ஸ்மேன், பவுலர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டோம். சுழற்பந்து வீச்சாளராக பவர்பிளே ஓவர்களில் பந்து வீசுவது சவாலான காரியம். சீராக ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்து வீசி வலை பயிற்சி செய்தேன். பிற்பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பவர்பிளே ஓவர்களில் என்னை பந்து வீச அனுமதிக்குமாறு கேப்டனிடம் கூறினேன். அதற்கு நான் தயாராகவும் இருந்தேன்.

பேட்டிங்கில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் அணிக்காக 20-25 ரன்கள் எடுப்பது பெரியது. அதை நான் செய்ததில் மகிழ்ச்சி. அணி நிர்வாகம் எங்களுக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தது. பயிற்சி மேற்கொண்டதன் பலன் இது. இந்த வெற்றி பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கானது. ஆட்ட நாயகன் விருதையும் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என முஜீப் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அதே போல 10 ஓவர்கள் 3 விக்கெட்களை அவர் கைப்பற்றி இருந்தார். அதன் காரணமாக அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in