

சென்னை: தமிழகத்தில் இருந்து அதிக கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு செஸ் சங்கம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக முதலில் சர்வதேச மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் ஐஎம் நார்ம்ஸ் தமிழ்நாடு க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு செஸ் சங்கத்தின் தலைவர் எம்.மாணிக்கம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து அதிக அளவிலான சர்வதேச மாஸ்டர்களை உருவாக்கும் வகையில் ஆண்டுக்கு 50 செஸ் தொடர்கள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 10 தொடர்களை 16-ம் தேதி (நாளை) முதல் டிசம்பர் 22 வரை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒவ்வொரு தொடரிலும் 5 வெளிநாட்டு வீரர்கள், 5 உள்நாட்டு வீரர்கள் கலந்துகொள்வார்கள். முதல் தொடர் சென்னையில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து ஹர்ஷத் (கோவை), அஷ்வத் (சென்னை), ஜா சேஷாத்ரி (நெய்வேலி) ஆகியோரும் அகில இந்திய அளவில் கவுதம் கிருஷ்ணா (கேரளா), ஸ்ரீஹரி (புதுச்சேரி) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுடன் அமெரிக்கா, கிர்கிஸ்தான், ரஷ்யா, அஜர்பைஜான், துர்க்மேனிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். தற்போது தமிழகத்தை சேர்ந்த 39 பேர் சர்வதேச மாஸ்டர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கையை முதற்கட்டமாக 59 ஆக அதிகரிக்கச் செய்யவேண்டும். இதுவே எங்களது முதல் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.