

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு சுவிஸ். நட்சத்திரம் ரோஜர் பெடரர் தகுதி பெற்றார்.
இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் டாமி ராப்ரீடோவை பெடரர் 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 12வது முறையாக விம்பிள்டன் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
முதல் செட்டில் பெடரர், ராப்ரீடோவுக்கு அவரது சர்வில் வெறும் 3 வெற்றிப்புள்ளிகளை மட்டுமே அளித்தார். இரண்டாவது செட்டில் அது கூட இல்லை சர்வில் 20 புள்ளிகளில் 20-ஐயும் ரோஜர் பெடரர் வென்றார். பெடரர் சர்வில் ராப்ரீடோ 14 முறைதான் புள்ளிகளைப் பெற முடிந்தது.
இந்த வெற்றியின் மூலமாக விம்பிள்டனில் 71 ஆட்டங்களில் வென்ற போரிஸ் பெக்கரின் சாதனையைச் சமன் செய்துள்ளார் பெடரர்.
டாமி ராப்ரீடோவை 12 முறை எதிர்த்து ஆடியுள்ள பெடரர் 11 முறை வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு யு.எஸ். ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஸ்பானிய வீரரான டாமி ராப்ரீடோவிடம் பெடரர் தோற்று வெளியேறியதற்கு இப்போது அதே 4வது சுற்றில் பழிதீர்த்தார் ரோஜர் பெடரர்.
இந்தப் போட்டியில் பெடரர் சர்வில் உயர்ந்து நின்றார். சர்வில் தொடர்ச்சியாக இரண்டு தவறுகளை அவர் செய்யவில்லை. தொட முடியாத 11 ஏஸ் சர்வ்களை அடித்த பெடரர் மொத்தம் இந்தப் போட்டியில் 41 வின்னர்களை அடித்தார்.
இந்த விம்பிள்டன் தொடரில் அவர் இன்னமும் ஒரு செட்டைக் கூடத் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சர்வை சரியாக வீசி அதில் வெற்றி பெற்ற வகையில் 88% பெடரர் இன்று துல்லியம் காத்தார். அப்படியே முதல் சர்வ் தவறாக அமைந்தாலும் 2வது சர்வில் பாயிண்ட்களை வென்ற வகையில் 73% பெடரரின் சர்வ் துல்லியத்தை எட்டியது.
காலிறுதியில் பெடரர் தனது சக வீரர் வாவ்ரின்காவை எதிர்கொள்கிறார். வாவ்ரின்கா, ஸ்பெயின் வீரர் லோபஸை 7-6, 7-6, 6-3 என்று வீழ்த்தினார்..