

சென்னை: சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும் தென்னாப்பிரிக்கா வளையப்பந்து வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய 5-வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ம் தேதிமுதல் அக்.7 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய வளையப்பந்து அணி, இந்திய சீனியர் அணி மற்றும் 23 வயதுக்கு உட்பட்ட அணி ஆகியவற்றில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் கலந்துகொண்டது. இந்திய சீனியர்ஆண்கள் அணியில் தமிழகத்தைச்சேர்ந்த இ.அறிவழகன், எம்.அபினேஷ், எம்.வைரமுத்து ஆகியோரும் பெண்கள் பிரிவில் ஏ.ரம்யா, கே.ஷிவானி, ஒய்.அம்பிகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதேபோல 23 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில்எஸ்.சுகிவர்மன், எஸ்.கார்த்திக் ராஜா ஆகியோரும் பெண்கள் பிரிவில் டி.தக்ஷிதா, எஸ்.மகேஸ்வரி, சி.சாத்விதா ஆகியோரும் விளை யாடினர்.
நடந்து முடிந்த 5-வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டியில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி குழுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. இந்திய சீனியர் அணி குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது.
சிறப்பாக விளையாடி நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்த அனைவருக்கும் தமிழ்நாடு வளையப்பந்து கழகத்தின் சேர்மன் எம்.வி.எம்.வேல்முருகன், தலைவர் சவுபாக்கியா வி.வரதராஜன், செயலாளர் டி.சங்கர், பொருளாளர் கே.அனந்தகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.