

மும்பை: எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளிட்ட ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் புட்பால் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு ஹோஸ்ட் நகரமும் (host city) தங்கள் நாடுகளில் நடத்தும் ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகளைச் சேர்க்க கோரிக்கை வைக்கலாம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விதி இதற்கு வழிவகை செய்கிறது.
அதன்படி, 2028 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ், பேஸ்பால் மற்றும் சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ், ஃப்ளாக் புட்பால் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகளை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க இந்த வார தொடக்கத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரிக்கையாக வைத்தது. இன்று மும்பையில் நடந்த ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாக குழு கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகள் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் ஒலிம்பிக்கில் மேற்கூறிய ஐந்து விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. இத்தகைய சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் பரிந்துரைக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. சில நாட்கள் முன் பேசிய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே (Greg Barclay), “லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். நூறாண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய விளையாட்டு மதிப்பீடு சார்ந்த செயல்முறையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழலில் மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்கு பிறகு எடுக்கப்படும் இறுதி முடிவை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.