

இந்தோனேசியாவில் நடந்து வரும் இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி. சிந்துவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்.
ஜகார்தாவில் 3.5 லட்சம் டாலர் பரிசு தொகை கொண்ட இந்தோனேசியன் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளான ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவும், தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான சாய்னா நேவாலும் மோதினர்.
கனுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்திருந்த சாய்னா நேவால் இந்தப் போட்டியில் தனது முழு பலத்தையும் காட்டி விளையாடி சிந்துவை திணறடித்தார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிந்துவை 21-13, 21-19 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார் சாய்னா.
அடுத்து வரும் அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை ரட்சானாக் இன்டானனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார் சாய்னா நேவால். இதுவரை சர்வதேச அளவில் இன்டானனுடன் 8 முறை மோதியுள்ள சாய்னா நேவால் அதில் 5 முறை வென்றுள்ளார்.
பி.வி.சிந்துவை எதிர்த்து சாய்னா இதற்கு முன் களத்தில் மோதியிருந்த போதிலும் இந்தியாவைவிட்டு வெளிநாடுகளில் இருவரும் நேருக்கு நேர் மோதியது இதுதான் முதல் முறையாகும். ஆனால் சாய்னா நேவால், தான் அனுபவ வீராங்கனை என்பதை நெருக்கடியான கட்டங்களில் வெளிப்படுத்தி வெற்றியை தனதாக்கினார்.
முதல் செட்டில் 3-0 என்ற நிலையில் இருந்த சாய்னா, அதன்பின், தனது நிலையை வலுப்படுத்தி 11-9 என்று சிந்துவை பின்னுக்கு தள்ளி கைப்பற்றினார்.
2-வது செட்டில் இருவரும் நீயா?, நானா? என்ற ரீதியில் 3-3 என்று சமநிலையில் இருந்தனர். ஆனால், சாய்னா தனது அதிரடி ஆட்டத்தையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தி 10-5 என்று சிந்துவை பணிய வைத்தார். முடிவில் 2-வது செட்டையும் வசப்படுத்தி சாய்னா வெற்றி பெற்றார்.