Published : 13 Jan 2018 10:17 am

Updated : 13 Jan 2018 10:17 am

 

Published : 13 Jan 2018 10:17 AM
Last Updated : 13 Jan 2018 10:17 AM

செஞ்சுரியனில் இன்று 2-வது டெஸ்ட் தொடக்கம்: தாக்குப்பிடிக்குமா விராட் கோலி குழு; தோல்வியடைந்தால் இந்திய அணி தொடரை இழக்க நேரிடும்

2

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் 2-வது டெஸ்ட்டில் செஞ்சுரியன் நகரில் இன்று மோதுகின்றன.


இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால் ஒன்று வெற்றி பெற வேண்டும், இல்லையென்றால் ஆட்டத்தை டிராவில் முடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடரை இழப்பதுடன் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை வென்ற சாதனைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துவிடும்.

2018-19ம் ஆண்டு சீசனில் அயல்நாட்டு மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ள நிலையில் 2-வது போட்டியிலேயே தோல்வியடைந்தால் தொடர் பறிபோகி விடும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய அணி. இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் சவால்களை எதிர்கொள்வதற்காக கடந்த சில நாட்களாக இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவண், முரளி விஜய், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, விருத்திமான் சஹா ஆகியோர் சுமார் 4 மணி நேரம் பேட்டிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சிகளில் கவனம் செலுத்தினர். இன்றைய போட்டியில் ஷிகவர் தவண் நீக்கப்பட்டு கே.எல்.ராகுல் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஷிகர் தவண் வெளிநாடுகளில் 19 டெஸ்ட்களில் விளையாடி 43.74 சராசரி வைத்துள்ளார். இது அவரது ஒட்டுமொத்த 29 போட்டிகளின் சராசரியை (42.62) விட சற்று அதிகம் தான்.

ஆனால் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஷிகர் தவண் 11 டெஸ்ட்டில் விளையாடி 27.81 சராசரியையே கொண்டுள்ளார். இதில் தென் ஆப்பிரிக்காவில் அவரது சராசரி வெறும் 18 தான். இங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்ச ஸ்கோர் 29 தான். அதுவும் கடந்த 2013-14ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் அடிக்கப்பட்டதே. எல்லாவற்றுக்கும் மேலாக இம்முறை அவரது ஷாட் தேர்வுகள் மோசமாக அமைந்தது. கேப்டவுன் டெஸ்ட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஷாட் மேற்கொண்டு விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

ஒப்பீட்டளவில் ஷிகர் தவணைவிட கே.எல்.ராகுல் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக செயல்படக்கூடியவர். மாறாக ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானேவை ஒப்பிடுவது எளிதானது அல்ல. சமீபகால பார்மின் அடிப்படையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு தேர்வான ரோஹித் சர்மா முறையே 11 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் ஒரு ஆட்டத்தில் வெளிப்படுத்திய திறன் அடிப்படையில் அவர் நீக்கப்படுவாரா என்பது சந்தேகம் தான். மாறாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்குவது குறித்தே விராட் கோலி ஆலோசிக்கக்கூடும்.

கேப்டவுன் நியூலேண்ட்ஸ் ஆடுகளத்தை விட செஞ்சுரியன் ஆடுகளம் வேகமானது. மேலும் பவுன்ஸ்களும் அதிகமாக இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அந்த இடத்தில் ரஹானே இடம் பெறக்கூடும். இதேபோல் வேகப்பந்து வீச்சு துறையிலும் சிறிது மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. பும்ரா, முகமது ஷமி நீக்கப்பட்டு இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் களமிறக்கப்படக்கூடும். இதில் உமேஷ் யாதவ் விளையாடும் லெவனில் இடம் பெறுதவற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாக உமேஷ் யாதவ் பந்து வீச்சு பயிற்சியுடன் பேட்டிங் பயிற்சிக்கும் கணிசமான நேரத்தை செலவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் 2-வது போட்டியை சந்திக்கிறது. கேப்டவுன் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்த போதிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர். 208 ரன்களே இலக்காக கொடுத்த போதிலும் இந்திய அணியை 135 ரன்களுக்குள் மட்டுப்படுத்தினர். இந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 9 விக்கெட்கள் கைப்பற்றிய பிலாண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட மோர்னே மோர்கல், ரபாடா ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர். காயம் காரணமாக ஸ்டெயின் விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அல்லது லுங்கின்ஜிடி இடம் பெறக்கூடும்.

ராசியான மைதானம்

போட்டி நடைபெறும் செஞ்சுரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 ஆட்டத்தில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. 17 ஆட்டங்களில் வெற்றியையும், 3 ஆட்டங்களை டிராவும் செய்துள்ளது. இந்திய அணி இங்கு கடைசியாக 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. - பிடிஐSign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x